சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் 8200 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். போட்டியிட விருப்பம் தெரிவித்த மனு தாக்கல் செய்தவர்களிடம் ஒரே நாளில் இன்று நேர்காணல் நடைபெறுகிறது. இதேபோல் புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட விரும்பி மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணலும் இன்று நடைபெற உள்ளது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் விருப்பமனு பெறப்பட்டது. அதிமுக தொண்டர்கள் பலரும் நேற்று வரை விருப்பமனு தாக்கல் செய்தனர். புதன்கிழமை மாலை 5 மணியுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்தது. 8200க்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். விருப்ப மனுக்களை பெற்ற அதே வேகத்துடன், நேர்காணலையும் விரைவாக நடத்தி முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. திமுக தரப்பில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
அந்த வகையில், திமுக வேட்பாளர் நேர்காணல் இரு தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக வேட்பாளர் நேர்காணல் இன்று நடைபெறுகிறது. இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட விரும்பி மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணலும் இன்று நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு கன்னியாகுமரி தொகுதிக்கு போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது.