
சென்னையை சுற்றியுள்ள பெல்ட் ஏரியா மற்றும் பிற மாவட்டங்களில், புறம்போக்கு நிலங்களில் வசிப்போர் பட்டா பெற, புதிய வழிகாட்டி விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், 32 கி.மீ., சுற்றளவில், 'பெல்ட் ஏரியா' பகுதியில், புறம்போக்கு நிலத்தில் வசிப்போருக்கு, பட்டா வழங்கப்படும். இதில், சென்னையை சுற்றியுள்ள 532 கிராமங்களைச் சேர்ந்த 29,187 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும். தமிழகத்தின் பிற மாவட்டங்களில், ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 57,084 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்படும் என, சமீபத்தில் முதல்வர் அறிவித்தார்.
இதற்கான வழிகாட்டி விதிகள், நடைமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம், சென்னை அடுத்த பல்லாவரத்தில் சமீபத்தில் நடந்தது. அதைத் தொடர்ந்து, புறம்போக்கு நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்திற்கான, புதிய வழிகாட்டி விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை, வருவாய் துறை செயலர் அமுதா பிறப்பித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
ஆட்சேபனையற்ற புறம் போக்கு நிலங்களில் வீடு கட்டி, 10 ஆண்டுகளாக வசிப்போர் தகுதி பெறுவர். குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களில் ஐந்து ஆண்டுகளாக வீடு கட்டி வசிப்போர், வரன்முறை அடிப்படையில் பட்டா பெறலாம்.
தரிசு நிலம், கல்லான்குத்து, பாறை, கரடு, கிராமநத்தம், அரசு நஞ்சை - புஞ்சை, அரசு அனாதீனம், பொதுகல் வகைபாட்டு நிலங்களில் வசிப்போர் பட்டா பெறலாம். வண்டிப்பாதை, பாதை, பாட்டை, களம், மயானம், தோப்பு வகைபாட்டில் உள்ள நிலங்களில் வசிப்போர், வரன்முறை அடிப்படையில் பட்டா பெறலாம்.
இதில் பட்டா பெற, ஆதார், ஸ்மார்ட் ரேஷன் கார்டு அடிப்படை ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்படும். பட்டா பெற விண்ணப்பிப்பவர் ஆண்டு வருமானம் 3 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
சென்னை தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில், 1 சென்ட் நிலம் இலவசம், அடுத்த 1 சென்ட் நிலத்துக்கான மதிப்பு தொகையை, அங்கு வசிப்போர் செலுத்த வேண்டும்.
பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், 2 சென்ட் நிலம் இலவசம். அடுத்த 1 சென்ட் நிலத்துக்கான மதிப்பு தொகையை செலுத்த வேண்டும்.
ஊராட்சி பகுதிகளில் விண்ணப்பிக்கும் குடும்பம் பயன்படுத்தி வரும் நிலம் அல்லது 3 சென்ட் ஆகியவற்றில் எது குறைவோ அந்த அளவுக்கு முழுதும் இலவசமாக பட்டா வழங்கப்படும். இதற்கு மேற்பட்டு அவர்களின் பயன்பாட்டில் உள்ள நிலங்கள், ஆக்கிரமிப்பாக கருதப்பட்டு, அரசின் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.
இதில், ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ள குடும்பங்களுக்கு, இலவச நிலம் கிடையாது. அவர்கள் வசிக்கும் பகுதி அடங்கிய உள்ளாட்சியின் நிலைக்கு ஏற்ப 2 சென்ட் அல்லது 3 சென்ட் நிலத்துக்கு பணம் செலுத்தி பட்டா பெறலாம்.
நிலத்துக்கான மதிப்பு தொகை, பதிவுத்துறையின் வழிகாட்டி மதிப்பு மற்றும் 2022ல் பிறப்பிக்கப்பட்ட வருவாய் துறை உத்தரவு அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இப்பணிகளை மேற்கொள்ள, மாவட்ட, மாநில அளவில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்படும். நடப்பு ஆண்டு, டிச., 31 வரை இத்திட்டம் அமலில் இருக்கும்.
நீர்நிலை உள்ளிட்ட ஆட்சேபகரமான நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கப்படாது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.