
ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு உணவு அளிப்பது நம் கலாசாரத்தில் தொன்று தொட்டு இருந்து வருகிறது.
அந்தவகையில், தமிழகத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் அன்னதான திட்டத்தை அப்போதைய முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
ஆன்றோர்கள், சான்றோர்கள், பக்தர்கள் வரவேற்பை பெற்று படிப்படியாக அதிகரிக்கப்பட்டு தற்போது 750 க்கும் மேற்பட்ட கோவில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 13 ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் ஆகிய இரு திருக்கோயில்களில் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்ற பின், கூடுதலாக 9 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 10 க்கும் மேற்பட்ட கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 750 க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கோயில் அன்னதான திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் வைர அட்டை வழங்கும் திட்டம் அறநிலையத்துறையிடம் இருப்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
தொன்மையும், வரலாற்று சிறப்புமிக்க தமிழக கோயில்களில், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்ற முதுமொழிக்கிணங்க தமிழக முதல்வரின் நலத்திட்டங்களில் ஒன்றான அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குவோரை ஊக்குவிக்கும் வகையில் குறைந்தபட்சம் 7 லட்ச ரூபாய் நன்கொடை வழங்குவோருக்கு தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை வைர அட்டை வழங்குகிறது.
இந்த வைர அட்டையின் சிறப்பம்சங்களாக இந்த அட்டை பெறுவோர் தமது குடும்பத்தார் 7 நபர்களுடன் 20 ஆண்டுகளுக்கு சிறப்பு தரிசன முன்னுரிமை வசதி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வழங்கப்படும் எனவும், இருப்பினும் கோயில் சிறப்பு தரிசன முன்னுரிமை என்பது அந்தந்த கோயில்களின் ஆண்டு திருவிழாக்களுக்கு பொருந்தாது எனவும், இந்த அடையாள அட்டை பரம்பரை உரிமை கோரத்தக்கதல்ல எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.