
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 3 வயது குழந்தை பாலியல் தொல்லை கொடுத்து முகத்தில் கல்லால் தாக்கிய வழக்கில் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு பற்றி மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி, 3 வயது குழந்தை சிறுவனின் முகத்தில் துப்பியது தான் சம்பவத்துக்கு காரணம் என்று கூறியிருப்பது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 3 வயது சிறுமி அங்குள்ள அங்கன்வாடிக்கு சென்று வந்தார். இந்நிலையில், 16 வயது சிறுவன் சாக்லேட் தருவதாக கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
சிறுமி எதிர்ப்பு தெரிவித்து அழ சிறுவன் குழந்தையின் தலை மற்றும் முகத்தில் கல்லால் தாக்கிவிட்டு ஓடிவிட்டார். இதில் சிறுமியின் கண் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சிறுமி நீண்டநேரமாக வீட்டுக்கு வராததால் பெற்றோர் தேடிப்பார்த்தபோது ரத்த காயத்துடன் உயிருக்கு போராடியா சிறுமியை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி சிறுமியின் குடும்பத்தினர் கொடுத்த புகாரில் போலீசார் 16 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இன்று கூறிய கருத்து சர்ச்சையாகி உள்ளது.
மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் ஆட்சிய. மகாபாரதி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
கடந்த வாரம் 3 வயது சிறுமிக்கு நடந்த சம்பவத்தை பார்த்தீர்களே ஆனால் அந்த குழந்தையே தவறாக நடந்துள்ளது. நீங்கள் கவனித்து பார்த்தால் அது உங்களுக்கு தெரியும். எனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின் படி அந்த பையனின் முகத்தில் குழந்தை துப்பி உள்ளது. இது தான் காரணம். 2 பேரையுமே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
இதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் Prevention is better than anything cure(வருமுன் காப்பதே சிறந்தது). Cure-யை விட Prevention ஆக செயல்பட வேண்டும். இதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பார்த்தால் குழந்தைகளுக்கு சொல்லி தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்கள் எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். இருப்பினும் குழந்தைகளுக்கு நாம் நேரடியாக சொல்லி தர முடியாது. குழந்தைகளுக்கு பெற்றோர் தான் எது தவறு என்று சொல்லி கொடுக்க வேண்டும். சின்ன வயது, 2 வயது, 3 வயது குழந்தையை அழைத்து அவர்களுக்கு சில விஷயங்களை சொல்லி புரிய வைப்பது கடினம். பெற்றோர்கள் தான் அதனை புரிய வைக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.
3 வயது சிறுமி முகத்தில் துப்பியதால் தான் 16 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதியே இப்படி கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் தனது பேச்சு குறித்த மயிலாடுதுறை ஆட்சியர் மாகாபாரதி விளக்கம் அளித்துள்ளார். இது பற்றி அவர் கூறும் போது, ‛‛குழந்தைகளுக்கு அவர்களின் இளம் பருவத்திலேயே பாலியல் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வை பெற்றோர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கருத்துகளை பதிவு செய்தேன்'' என்று கூறியுள்ளார். இருப்பினும் அவரது பேச்சுக்கு சமூக வலைதளங்களில் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பி வருகிறது.