
கோவையில் 17 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அதன் பக்கத்து ஊரான திருப்பூரில் கணவர் மற்றும் குழந்தையின் கண் முன்னே இளம் பெண் ஒருவர் கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கல்வி நிலையங்கள் தொடங்கி பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பொதுமக்களையும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று கோவையில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்ளே மேலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி உள்ளது. அதுவும் கோவைக்கு அருகில் இருக்கும் திருப்பூரில் தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த இளம் பெண் திருப்பூரில் கடந்த சில நாட்களாக தங்கி வேலை பார்த்து வந்திருக்கிறார். தற்போது வேலை இல்லாத நிலையில் ஊருக்கு செல்வதற்காக திருப்பூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது அங்கு வந்த பீகாரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் அவர்களிடம் பேச்சு கொடுத்துள்ளனர். தங்களுக்கு தெரிந்த பனியன் நிறுவனத்தில் வேலை இருப்பதாகவும் அங்கு வந்தால் நல்ல ஊதியம் கிடைக்கும், குடும்பத்துடன் தங்கி வேலை பார்க்கலாம், உணவும், தங்குமிடம் அனைத்தும் இலவசமாக தரப்படும் எனக் கூறியிருக்கின்றனர். இதனையடுத்து இளம்பெண் குடும்பத்துடன் அந்த நிறுவனத்தை நோக்கி சென்றிருக்கிறார்.
பின்னர் மூன்று இளைஞர்களும் கத்தி முனையில் அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றிருக்கின்றனர். தட்டி கேட்ட கணவரையும் தாக்கி உள்ளனர். தொடர்ந்து குழந்தை கணவர் கண் முன்னே அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இது குறித்து வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கணவர் மற்றும் குழந்தையோடு சென்று திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகார் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட பீகாரை சேர்ந்த நதீம், டேனிஷ், முர்ஷித் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.