
அரசின் துறைகளில் ஏராளமான பணம் புழங்கக்கூடிய துறையாக பத்திரப்பதிவு, வருவாய்த்துறை துறை உள்ளிட்டவைகள் விளங்கி வருவதால், இந்த துறையில் லஞ்ச புகார்கள், அதையொட்டிய கைது நடவடிக்கைகளும் பெருகி வருகின்றது. இந்நிலையில் தான், வள்ளியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒரு கொடுமை நடந்துள்ளது.
நெல்லை மாவட்டம், வள்ளியூர் லுத்தர் நகரை சேர்ந்தவர் சுரேஷ் பாக்கியம். இவர் கடந்த 2024 மார்ச் மாதம் இனோவா கார் ஒன்றை வாங்கியிருக்கிறார். பிறகு, திருநெல்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிகமாக பதிவு செய்துள்ள நிலையில், நிரந்தர பதிவு செய்ய முயன்றார்.
அதற்காக, தன்னுடைய நண்பர் லாரன்ஸ் என்பவரின் உதவியுடன், வாகன பதிவு சான்று கட்டணம், ஆயுள்கால வரி மற்றும் தாமத கட்டணம் என மொத்தம் ரூ.4,35,490 செலுத்தினார். அத்துடன், போன ஜனவரி மாதம் 22ஆம் தேதி வள்ளியூர் ஆர்டிஓ ஆபீசுக்கு சென்று, அங்கிருந்த ஆய்வாளர் பெருமாளிடம் வாகன ஆவணங்களையும் சமர்ப்பித்திருக்கிறார். ஆனால், ஆய்வாளர் பெருமாளோ காரை நிரந்தரமாக பதிவு செய்ய வேண்டுமானால் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்று ஸ்டிரிக்ட்டாக கேட்டாராம்.
அதற்கு பிறகு, மீண்டும் கடந்த ஜனவரி 28ம் தேதி ஆய்வாளரை சந்தித்துள்ளார் சுரேஷ் பாக்கியம். அப்போது ஆய்வாளர் பெருமாள் அதே ரூ.20 ஆயிரம் லஞ்சம் வேண்டும் என்பதில் சற்றும் பின்வாங்காமல் பிடிவாதமாக இருந்திருக்கிறார். தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று சுரேஷ் பாக்கியம் சொல்லவே, லஞ்சத் தொகையை 15 ஆயிரம் ரூபாயாக பேரம் பேசி மனம் இறங்கி குறைத்தாராம் பெருமாள். அப்போது சுரேஷ் பாக்கியம், தன்னிடம் ரூ.10 ஆயிரம் தான் இருக்கிறது என்றாராம்.
அதற்கு ஆய்வாளர், அப்படியானால், மீச்சம் ரூ.5000 நாளை வரும்போது தர வேண்டும் என்று கறாராக கூறி, இந்த 10000 பணத்தை கூகுள் பே மூலம், ஒரு செல்போன் நம்பருக்கு அனுப்ப சொன்னாராம் மோட்டார் வாகன ஆய்வாளார் பெருமாள். சுரேஷ் பாக்கியமும், அவர் சொன்னபடியே, அந்த செல்போனுக்கு பணத்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால்தான் ஆர்சி புத்தகத்தை ரிலீஸ் செய்வேன் என்று மீண்டும் ஸ்டிரிக்ட்டாக சொல்லிவிட்டாராம் பெருமாள்.
ஆனால், மறுநாளே ரூ.5 ஆயிரம் புரட்ட முடியாமல் திணறிய சுரேஷ் பாக்கியம், கஷ்டப்பட்டு வாங்கிய காருக்கு எதற்காக லஞ்சம் தர வேண்டும் என்று நினைத்து, ஆய்வாளர் மீது திருநெல்வேலி லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்து விட்டார்.
இந்த புகாரின்பேரில், வள்ளியூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.