
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்ட தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேளாண்மை அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வருகிறது. மெர்க்கன்டைல் வங்கியில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் அவ்வப்போது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நிரப்பப்படுகின்றது. அந்த வகையில் தற்போது காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி
வேளாண்மை அதிகாரி பணியிடத்திற்கு வேளாண்மை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்பு / கால்நடை அறிவியல் உள்ளிட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு முடித்து இருக்க வேண்டும். 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம் பெற்று இருக்க வேண்டும். கூடுதலாக வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்து இருக்க வேண்டும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பு 30 ஆகும்.
தேர்வு முறை
தேர்வு முறையை பொறுத்தவரை தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வு நேரடியாகவோ அல்லது வீடியோ கான்பரன்சிங் வாயிலாகவோ நடைபெறும்.
விண்ணப்பிப்பது எப்படி?
தேவையான கல்வி தகுதி மற்றும் அனுபவம் இருப்பவர்கள் http://www.tmbnet.in/tmb_careers/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 27.01.2025 முதல் ஆன்லைன் பதிவு தொடங்கியுள்ளது. 9.02.2025 அன்று இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்
பிற விவரம்
தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் பணியாளர்கள், நவீன வேளாண்மையை கடைபிடிக்க வலியுறுத்துவதோடு, ஊக்குவிக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகளுக்கு உள்ள சலுகைள், நிதி உதவி, கடன் திட்டங்கள் பற்றி எடுத்து விளக்க வேண்டியிருக்கும். கிசான் கிரெடிட் கார்டுகள், பயிர்க் கடன்கள் பெற தகுதியான விவசாயிகளை மதிப்பிட வேண்டும். அரசின் திட்டங்கள், நபார்டு வழிமுறைகள் உள்ளிட்டற்றை நன்கு தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.