
ஓட்டு வீட்டில் வசித்து வரும் 76 வயது பழனிசாமி என்பவருக்கு ஒரு லட்சம் வரி போட்ட கோவை மாநகராட்சி வரி வசூலரை பணியிடை நீக்கம் செய்யவும், மண்டல உதவி வருவாய் அலுவலருக்கு மெமோ கொடுக்கவும் கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகராட்சி, மாநகராட்சி எல்லைக்குட்டபட்ட பகுதிகளுக்கு வீடு, குடிநீர், கழிவு நீர் உள்ளிட்ட வரிகளை விதித்து வருகிறது. அந்த வகையில், கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 8வது வீதியில் வசித்து வரும் 76 வயதான பழனிச்சாமிக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. காவலாளியான இவர் அந்த பகுதியில் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார். வீட்டின் முன்புற பகுதியை மெஸ் நடத்துவதற்காக வாடகைக்கு விட்டு உள்ளார்.
ஆனால் டிரோன் சர்வே எடுத்த கோவை மாநகராட்சி அலுவலர்கள், வீட்டின் மொத்த பரப்பையும் வணிக பகுதியாக மாற்றி,,சொத்து வரி மறுசீராய்வு செய்திருக்கிறார்கள். இவர் தனது வீட்டுக்கு இதுவரை வரி ரூ.2,182 தான் செலுத்தி வந்திருக்கிறார். வரி சீராய்வு செய்ததால் இனி 6 மாதத்துக்கு ஒருமுறை ரூ.51 ஆயிரத்து 322 சொத்து வரி, குப்பை வரி ரூ.300, அபராத கட்டணம் ரூ.1,050 சேர்த்து ஒரு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 344 செலுத்த வேண்டும் என கோவை மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக சமூகவலைத்தளங்களில் ஓட்டு வீட்டில் பழனிச்சாமி பரிதாபமாக நின்ற வீடியோ, புகைப்படங்கள் வெளியாகி இருந்தது.
இத்தகவல் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் இந்த தவறுக்கு காரணமான வரி வசூலரை பணியிடை நீக்கம் செய்யவும், மண்டல உதவி வருவாய் அலுவலருக்கு மெமோ கொடுக்கவும் உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாநகராட்சி துணை ஆணையாளர் குமரேசன் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தினார். அதன் படி துணை ஆணையாளர் விசாரணை நடத்தினார். டிரோன் மூலம் ஆய்வு செய்து வரி சீராய்வு செய்த போது பணியாற்றிய வரி வசூலர் ஜெய்கிருஷ்ணன் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தற்போதைய வரி வசூலர் ஆனந்த் பாபு, உதவி வருவாய் அலுவலர் கிருபாகரன் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டு உள்ளதாக கோவை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.