
சென்னை ஈசிஆரில் பெண்களின் காரை 2 கார்களில் இளைஞர்கள் துரத்திச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நடந்தது என்ன என்பது குறித்து போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை ஈசிஆரில் கடந்த 25ம் தேதி அதிகாலையில் பெண்கள் சென்ற காரை இரண்டு கார்களில் வந்த இளைஞர்கள் துரத்தி சென்று வழிமறித்து அவர்களிடம் ஆபாசமாக பேசியுள்ளனர். மேலும் காரை விட்டு இறங்குமாறும் அந்த பெண்களை இளைஞர்கள் மிரட்டினர். இது தொடர்பாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் கானத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இரண்டு தனிப்படைகள் அமைத்தும் பெண்களின் காரை துரத்திய இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இளைஞர்கள் வந்த காரில் திமுக கொடி கட்டியிருந்ததால் இந்த விவகாரம் பெரும் பூதாகரமாக மாறியது. எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதற்கு இதுவே சாட்சி எனவும் விமசித்தனர். இந்நிலையில் தான் இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ஈசிஆர் முட்டுக்காடு படகு குழாம் மேம்பாலம் மீது கோவளம் கடலில் பக்கிங்காம் கால்வாய் கலக்கும் முகத்துவாரத்தை பார்த்து ரசிப்பதற்காக அந்த 4 இளைஞர்களும் தாங்கள் சென்ற காரை நிறுத்தியுள்ளனர்.
அப்போது அந்த இளைஞர்கள் நிறுத்திய காரின் பின்னால், புகார் அளித்த பெண்கள் தங்களின் காரை நிறுத்திவிட்டு கழிமுகப்பகுதியில் வேடிக்கை பார்த்து உள்ளனர். தொடர்ந்து, வீட்டிற்கு செல்வதற்காக பெண்கள் தங்களின் காரை ரிவர்ஸ் எடுத்துள்ளனர். அப்போது பின்னால் நின்றிருந்த இளைஞர்களின் கார் மீது பெண்களின் கார் உரசி உள்ளது. ஆனால் அந்த பெண்கள் மன்னிப்பு கூட கேட்காமல் தங்களின் காரை எடுத்துக்கொண்டு வந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் 2 கார்களில், பெண்கள் வந்த காரை விரட்டி சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெண்கள், காரை இடித்திருந்தால் அது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டுமே தவிர இப்படி இரவு நேரத்தில் பெண்களை விரட்டிச் செல்வது முறையல்ல. இது சரியான செயலா? என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே பெண்களின் காரை விரட்டிச் சென்று மறித்து மிரட்டிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர்.