
டாஸ்மாக் மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பதை தடுக்கும் வகையில், வருகிற மார்ச் மாதம் முதல் கியூ ஆர் கோடு முறையில் மது விற்பனை அமல்படுத்தப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
அரசு மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட கடையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கடந்த 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டாஸ்மாக் நிர்வாகம் சுற்றறிக்கை பிறப்பித்தது.
இதனை எதிர்த்து தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை நீதிபதி பரத சக்கரவர்த்தி விசாரித்தார். மனு தாரர்கள் தரப்பில், தனிப்பட்ட ஊழியர்கள் செய்யும் தவறுக்கு அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்வது என்பது சட்ட விரோதமானது என வாதிடப்பட்டது.
அரசுத் தரப்பிலும், இடையீட்டு மனுதாரர் தரப்பிலும், ஊழியர்கள் கூட்டு சேர்ந்து அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்து விட்டு, கூடுதல் தொகையை தங்களுக்குள் பங்கிட்டு கொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், அரசு தரப்பில், டாஸ்மாக் மதுபான கடையில் மதுபான விற்பனை வரும் மார்ச் முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளதாகவும், அதன் பிறகு நுகர்வோர்கள் வாங்கும் ஒவ்வொரு பாட்டிலும் கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட விலை மட்டுமே வசூலிக்கப்படும் என்றும் அதன் பிறகு கூடுதல் தொகை வசூக்கப்படுவதாக புகார் எதுவும் எழாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் இந்த வாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி, டாஸ்மாக் கடையில் கூடுதல் தொகை வசூலிக்கும் விவகாரத்தில் அனைத்து ஊழியர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதற்கு முகாந்திரம் இருந்தால் மட்டுமே அனைத்து ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, டாஸ்மாக் நிறுவாகத்தின் சுற்றறிக்கையை உறுதி செய்து, வழக்கை முடித்து வைத்தார்.