ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உளுப்பினராக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். அவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்ததையடுத்து, 2023 ஆம் ஆண்டு இடைத்தேர்தலில் அவருடைய தந்தையும், காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவரும், மூத்த நிர்வகியுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அவரும் உடல்நிலை பாதிப்பால் கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி காலமானார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறையும் திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு காங்கிரஸ் கட்சியினரே போட்டியிடக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இந்த முறை திமுக போட்டியிடுகிறது என அறிவிக்கப்பட்டது. இதை காங்கிரஸ் நிர்வாகிகள் எல்லாம் இணைந்து ஒரு மனதாக முடிவு செய்ததாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்திருந்தார். மேலும், திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் அவரை வெற்றி பெறச் செய்வோம் என அறிவித்திருந்தார்.
இந்நிலையில் திமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு முன்னாள் எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாரா இல்லை அந்த தொகுதியின் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
வி.சி.சந்திரகுமார் 2011ல் தேமுதிக சார்பில் போட்டியிட்டு ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஆனார். பின்னர் அவர் தேமுதிகவிலிருந்து விலகி தனிக் கட்சியை தொடங்கிய நிலையில் திமுகவில் இணைந்தார். அவர் திமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்து வருகிறார்.