• vilasalnews@gmail.com

பட்டா விவகாரம் : மகிழ்ச்சி செய்தி வெளியிட்ட தமிழக அரசு!

  • Share on

தோராய பட்டா வைத்துள்ள அனைவருக்கும் இ-பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் நேற்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.


புறநகர் அல்லது கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதியாக இருக்கும் அரசு நிலங்களையே, நத்தம் நிலங்கள் என்று சொல்கிறோம். இந்த நிலங்கள் பொதுமக்களின் குடியிருப்பு தேவைக்காக பிரிட்டிஷ் காலத்திலேயே வகைப்படுத்தி ஒதுக்கப்பட்டிருந்தது.


பல்வேறு சூழ்நிலைகள் மற்றும் அடிப்படைகள் ஆகியவற்றின் காரணமாக, இங்கு வசித்து வருபவர்களுக்கு தோராய மற்றும் தூய பட்டா அரசால் வழங்கப்படுகிறது. மிகவும் துல்லியமான சரியான பட்டாவை தான் தூய பட்டா என்கிறோம். இதில் எந்த விதமான பிழையும் இருக்காது. சரியான நில அளவை செய்யப்பட்டிருக்கும்.


ஆனால் தோராயம் என்பது ஒரு சரியான அளவு கிடையாது. அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நத்தம் அளவை செய்திருக்கும். கூடுதலாக ஏக்கர் கணக்கிலும் நத்தம் புறம்போக்குகளாக அரசாங்கம் அமைத்திருக்கும். இதில், நிலம் இல்லாதவர்களுக்கும் அல்லது அனுபவ முறையில் அங்கு வசித்து வரும் மக்களுக்கும் அந்த இடத்தில் ஒவ்வொருவருக்கும் பட்டாவை ஒதுக்கும். இந்த பட்டாவையே தோராய பட்டா என்கிறோம்.


அதாவது, நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டாவாக அளிக்கப்படுவதாகும். சாலைகள், குளங்கள் உள்ளிட்ட பகுதிகளை தக்க முறையில் ஆவணப்படுத்தி நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்த அந்த நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு அரசு பட்டா வழங்குவதன் மூலம் நிலம் வரி விதிப்புக்குள் கொண்டு வரப்படுகிறது.


மேற்கண்ட பட்டாவில் உள்ள பெயர்கள், அளவுகள் ஆகியவற்றில் திருத்தங்கள் கண்டறியப்பட்டு அவை தெரிவிக்கப்படும் நிலையில் தக்க திருத்தங்கள் மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் அது தோராய பட்டா என்று குறிப்பிடப்படுகிறன.


நில சர்வேயரை கொண்டு ஒரு நிலங்களாக அல்லது வீட்டு மனைகளாக அளந்து ஒவ்வொருவருக்கும் இந்த பட்டா வழங்கப்படும். இந்த தோராய பட்டாக்களில் நில உரிமையாளர் பெயர், தந்தை பெயர், தீர்வை, அளவுகள் தரப்பட்டிருக்கும். அளவுகள் அனைத்தும் சதுர மீட்டரில் இருக்கும். இதில் பிழைகள் ஏதாவது இருந்தால் 45 நாட்களுக்குள் தாசில்தார் அலுவலகம் சென்று மாற்றிக் கொள்ள வேண்டும். பிழைகளை திருத்துவதற்கு கால அவகாசம் தரப்படும் என்றாலும், இது ஒரு தற்காலிகமான பட்டா ஆகும்.


இந்த நிலையில் தான், தோராய பட்டா வைத்துள்ள அனைவருக்கும் இ-பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் சட்டப்பேரவையில் நேற்று அதிரடியாக அறிவித்திருக்கிறார்.


தோராய பட்டா வைத்துள்ள அனைவருக்கும் இ-பட்டா வழங்க வேண்டும் என்று அரக்கோணம் எம்எல்ஏ ரவி கோரிக்கை வைத்திருந்த நிலையில், வரும் ஆண்டில் அனைவருக்கும் இ-பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி தெரிவித்துள்ளார்.

  • Share on

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார்!

  • Share on