• vilasalnews@gmail.com

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்!

  • Share on

மதுரையில் -  தூத்துக்குடி இடையே அகல ரயில் பாதை திட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தென்மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் (1999 – 2000) ரயில்வே பட்ஜெட்டில் அருப்புக்கோட்டை வழியாக மதுரை – தூத்துக்குடி இடையே புதிய ரயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 143.5 கி.மீ. தொலைவு பாதையைக் கொண்டதாக இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.


அதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் இருந்து திருப்பரங்குன்றம், பாறைப்பட்டி, ஆவியூர், காரியாபட்டி, கல்குறிச்சி, அருப்புக்கோட்டை, பந்தல்குடி, புதூர், நாகலாபுரம், விளாத்திகுளம், குளத்தூர், மேலமருதூர், வாலசமுத்திரம், சில்லாநத்தம், சாமிநத்தம், தட்டப்பாறை, மீளவிட்டான் வழியாக தூத்துக்குடி ரயில் நிலையம் வரை உள்ள 143 கி.மீ.க்கு புதிய அகல ரயில்பாதை அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. மதுரை, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கியது இத்திட்டம்.


தொலைதூரத்துக்கான ரயில் போக்குவரத்து வசதி இல்லாத அருப்புக்கோட்டை, விளாத்திக்குளம் பகுதி மக்களுக்கு இந்தத் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்றும், தூத்துக்குடி துறைமுகத்தையும், மதுரை விமான நிலையத்தையும் இணைக்கக் கூடிய திட்டமாக இருப்பதால், இந்தத் திட்டத்தின் மூலம் மதுரை, விருதுநகா், தூத்துக்குடி மாவட்டங்களின் வணிகப் பொருளாதாரமும் மேம்படும் எனவும் கருதப்பட்டது.


திட்டத்தின் முதல் கட்டப் பணிகளாக தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் - மேல்மருதூா் வரையிலான 18 கிலோ மீட்டர் தொலைக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பாதையில் கடந்த 2022 ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் சோதனை ரயில் ஓட்டமும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 


ஆனாலும், மேலமருதூர் – திருப்பரங்குன்றம் வரை நிலம் கையகப்படுத்துவதில் தொடர்ந்த தாமதம், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளால் இத்திட்டத்தில் தொய்வு நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்,


சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வரும் அம்ரித் பாரத் 2.0 படுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை இன்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்


அதைத் தொடர்ந்து செய்தியாளரிடம் அவர் கூறியதாவது:-


நாடு முழுவதும் ரயில் போக்குவரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில், தமிழகத்துக்கு ரயில்வே துறை சார்பில் செயல்படுத்தப்படும் புதிய திட்டங்களுக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.


இந்நிலையில், தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திட்டத்தை வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட்டது.


ஏழை, எளிய மக்களும் வந்தே பாரத் ரயில்களில் பயணிக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக குறைந்த கட்டணத்தில் அம்ரித் பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துவரும் நிலையில், தற்போது படுக்கை வசதி கொண்ட அம்ரித் ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட்டு அனைத்து சோதனைகளும் நிறைவடைய குறைந்தபட்சம் 3 மாதங்களாவது ஆகும்.


அந்த வகையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் 50 அம்ரித் ரயில்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.


தமிழகத்தில் பாம்பன் பாலம் அமைக்கும் பணி முழுமையாக நிறைவு பெற்று சோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றது. விரைவில், அந்த பாலமும் திறந்து வைக்கப்படும். அதேபோல ஜம்மு காஷ்மீர் இடையே வந்தே பாரத் ரயில் பாதை அமைக்கும் பணியும் நிறைவு பெற்றுள்ளது. சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிந்த பின்னர் அங்கு ரயில் இயக்கப்படும். கடந்த நிதியாண்டில் ரயில்வே மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் இதுவரை 76 சதவீதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.


எனவே, தூத்துக்குடியில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு புதிதாக ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த திட்டத்தை வேண்டாம் எனக் கூறி தமிழக அரசிடம் இருந்து எழுத்துபூர்வமான கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறிய தகவல், தென்மாவட்ட மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

கிராம ஊராட்சிகளை அருகில் உள்ள மாநகராட்சிகளுடன் இணைக்க விருப்பம் இல்லை என்றால்... இணைப்பு ஏன்? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்!

பட்டா விவகாரம் : மகிழ்ச்சி செய்தி வெளியிட்ட தமிழக அரசு!

  • Share on