தமிழ் மரபுகளில் மலையும் மலை சார்ந்த இடத்தை குறிஞ்சி நிலமாகவும், வயலும் வயல் சார்ந்த இடத்தை மருதம் என்றும் அழைக்கிறார்கள். இந்த இரண்டு நில அழகுகளையும் தனதாக்கிக் கொண்டது போன்ற அற்புதமான பெயருடன் மருதமலை என்று அழைக்கப்படும் ஸ்தலத்தில் முருகன் பிரகாசத்துடன் அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மேற்கு தொடர்ச்சி மலையில் தரை மட்டத்தில் இருந்து இருநூறு அடி உயரத்திலும் கோவையிலிருந்து வடமேற்கு திசையில் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.
மருதம் மரங்கள் நிறைந்தும் நோய் நீக்கும் மருந்து குணங்களை உள்ளடக்கிய மூலிகைகளைக் கொண்ட மலையில் அருளுபவர் என்பதால், இங்கு முருகன், மருதாச்சலமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். மருதமரமே இந்த தலத்தின் விருட்சம். தீர்த்தத்தின் பெயர் மருது சுனை. இந்த தீர்த்தம் பிரசித்தி பெற்றது.
இம்மலையை மருந்து மலை என்று சொல்லும் வகையில் மக்களின் உடற்பிணியும், மனப்பிணியும் நீக்கும் மூலிகைகளும் மரங்களும் உள்ளது.
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது வாக்கு. முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் இந்த மருதமலையும் ஒன்று. அருணகிரிநாதரால் பாடப் பெற்றவர் இத்தல முருகப் பெருமான். மருதமலை முருகனின் ஏழாம் படைவீடு என்றும் புகழப்படுகிறது.
பாம்பாட்டிச் சித்தர், முருகனுக்கு புதிய சிலை வடித்தார். இந்த சிலையே கருவறையில் இருக்கிறது. இரு கரங்களுடன் உள்ள இந்த முருகப்பெருமான் பழநி முருகனைப் போலவே கையில் தண்டத்துடன் இடதுகையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தருகிறார். தலைக்கு பின்புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்திருக்கிறார். தினமும் ராஜ அலங்காரம், விபூதிக்காப்பு, சந்தனக்காப்பு என 3 வித அலங்காரங்களுடன் காட்சி தருவார். விசேச நாட்களில் வெள்ளிக்காப்பும், கிருத்திகை மற்றும் தைப்பூசம் நாட்களில் தங்க கவசமும் அணிவிக்கப்படுகிறது. அர்த்தஜாம பூஜையில் மட்டுமே இத்தல இறைவனை, தண்டாயுதபாணியாக சுய ரூபத்தில் தரிசிக்க முடியும். அப்போது இறைவனுக்கு ஆபரணம் கிரீடம் என எதுவும் இல்லாமல் வேஷ்டி மட்டும் அணிவிக்கின்றனர்.
கூடுவிட்டு கூடு பாயும் வல்லமை கொண்ட பாம்பாட்டிச் சித்தர் இன்றும் சுரங்கம் வழியாகச் சென்று மருதமலை முருகனுக்கு பூஜை செய்வதாகப் பக்தர்களால் நம்பப்படுகிறது.
இத்தகைய பல்வேறு சிறப்புகள் பெற்ற மருதமலை முருகன் கோவிலுக்கு தினமும் ஏரளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கிருத்திகை, சஷ்டி, தைப்பூசம் போன்ற விஷேச நாட்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதும். மேலும் விடுமுறை, பண்டிகை காலங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும்.
இந்த நிலையில், பொங்கல் திருநாள் பண்டிகையை முன்னிட்டும் மருதமலை கோவிலுக்கு அதிகளவிலான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொடர் விடுமுறையாக இருப்பதாலும் ஒவ்வொரு நாளும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, மருதமலை மலை பாதை மற்றும் கோயில் வளாகத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, ஜனவரி 14ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை பொங்கல் திருவிழா மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு மருதமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் அதிக அளவில் பக்தர்கள் வருவதை கருத்தில் கொண்டு, மேற்குறிப்பிட்ட நாட்களில் மலைக்கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை.
இரு சக்கர வாகனங்கள், மலைப்படிகள், கோயில் பேருந்து மற்றும் திருக்கோயில் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பேருந்துகளில் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.