பத்திரப்பதிவுக்கு மூலபத்திரம் அல்லது காணாமல் போன மூலபத்திரம் கிடைக்கவில்லை என்று காவல்துறையில் சான்று வாங்கி வர வேண்டும் என்று பத்திரபதிவுக்கு வருபவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது. அந்த பத்திரத்தின் நகலை தாக்கல் செய்தாலே அதனை வைத்தே பத்திரபதிவு செய்து கொடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், விகேபுரத்தை சேர்ந்தவர் அலெக்ஸாண்டர். இவருக்கு சொந்தமாக அம்பை தாலுகா சிவஞானபுரம் வடக்குத் தெருவில் இரு சர்வே எண்களில் இரு நத்தம் நிலங்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் அவரது தந்தை கடந்த 29.6.1998ல் தானமாக கொடுத்துள்ளார். இந்த சொத்தை அவரது மனைவி பெயருக்கு மாற்றம் செய்வதற்கு வி.கே.புரம் சார்பதிவாளரை அணுகியுள்ளார். அப்போது மூலபத்திரம் அசல் தாக்கல் செய்யவில்லை என்பதால் பத்திரபதிவிற்கு மறுத்ததுடன் காவல்துறையில் மூலபத்திரம் தொலைந்ததற்கான சான்று வாங்கிவந்தால் தான் பத்திரபதிவு செய்யமுடியும் என்று சார்பதிவாளர் திருப்பி அனுப்பிவிட்டார்.
இதனால் மூலபத்தி ரத்தின் நகலை வைத்து சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்திட உரிய உத்தரவிட வேண்டி மதுரை ஐகோர்ட்டில் அலெக்ஸாண்டர் மனு தாக்கல் செய்திருந்தார். மனுதாரர் சார்பாக வழக்கறிஞர்கள் கணேச பெருமாள், மலையரசி கணேசபெருமாள் ஆகியோர் ஆஜராகினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
வழக்கமாக ஒரு பத்திரபதிவு செய்ய வேண்டுமானால் பத்திரப்பதிவு சட்டப்படி மூலபத்திரம் இருக்க வேண்டும். மூலபத்திரம் இல்லாவிட்டால் சார் பதிவாளர் போலீசில் பத்திரம் காணவில்லை என்று புகார் கொடுத்து அதற்கு போலீசார் சான்று அளிக்க வேண்டும் என்றும் அதனை அளித்தால் தான் பத்திரபதிவு செய்யமுடியும் என்று கட்டாயபடுத்தக் கூடாது.
எல்லா நேரங்களிலும் போலீஸ் சான்று தேவை என கூறுவது முறைகேடான வழியில் சான்று பெறுவதை ஊக்குவிக்கும். போலீஸ் சான்று பெறுவதில் ஏற்படும் செலவு மற்றும் சிக்கல்களால், வெளிமாநிலங்களில் இருந்து சான்றுகள் வருவது அதிகரித்துள்ளதாக ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது. எனவே அசல் மூலஆவணம் மற்றும் போலீஸ் சான்று இல்லாவிட்டாலும் நகலை ஒப்பிட்டுபார்த்து பத்திரபதிவு செய்யவேண்டும். அனைத்து ஆவணங்களும் பத்திரபதிவு அலுவலகத்தில் இருக்கும் என்பதால் அதனை மட்டுமே ஒப்பிட்டு பத்திரபதிவு செய்ய வேண்டும். அசல் மூல ஆவணம் தாக்கல் செய்யவில்லை என்ற காரணத்தினால் மனு தாரரின் பத்திரத்தினை பதிவு செய்ய மறுத்தது தவறானது. ஆகவே மனு தாரரின் பத்திரத்தினை ஒருவார காலத்திற்குள் பதிவு செய்யவேண்டும். அதற்கு மூலப்பத்திரத்தை கேட்காமல் பதிவாளர் பதிவு செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.