திருச்சியில் நகைக்காக மூதாட்டியை கொன்று சாக்கு பையில் கட்டி குப்பைத்தொட்டியில் வீசிய வழக்கில் தூத்துக்குடியைச் சேர்ந்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
திருச்சி கோட்டை, சூப்பர் பஜார் பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில், நேற்று (டிச., 10 திங்கள்கிழமை) காலை குப்பைகளை சேகரிக்கச் சென்ற போது, சந்தேகத்துக்கிடமான வகையில் சாக்கில் வைத்து சுருட்டிய மர்ம பொருள் கிடந்துள்ளது. அதை தூய்மை பணியாளர்கள் பிரித்துப் பார்த்தபோது அவர் அதிர்ச்சியடையும் வகையில், உள்ளே மூதாட்டி ஒருவரின் உடல் இருந்ததை கண்டனர்.
உடனே இது குறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, நேற்று முன்தினம் திருச்சி கோட்டை பகுதிக்கு வந்த, மண்ணச்சநல்லூர் வட்டம் திருவாசியைச் சேர்ந்த கல்யாணி (வயது 72) என்ற மூதாட்டி மாயமானதாக போலீசாருக்கு புகார் வந்திருந்தது. அதன் பேரில், உறவினர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்தது கல்யாணிதான் என தெரியவந்தது. பின்னர், உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
முதல் கட்ட விசாரணையில், மூதாட்டி கல்யாணி குடும்ப ஓய்வூதியத் தொகையை எடுத்துக்கொண்டு, கோட்டை பகுதிக்கு வந்து பொருட்கள் வாங்கிச் செல்வது வழக்கமாம். அந்த வகையில், நேற்று முன்தினமும் (ஞாயிற்றுக்கிழமை) காலை வந்தவர் மாலை ஆகியும் வீடு திரும்பவில்லையாம். இதனால், அவரது மகன் மற்றும் உறவினர்கள் தேடியுள்ளனர். கோட்டை காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் கோட்டை பகுதிக்கு வந்த மூதாட்டி மர்ம நபர்களிடம் சிக்கியுள்ளார். அவரிடமிருந்த தொகை, அணிந்திருந்த தோடு, மூக்குத்தி உள்ளிட்டவைகளையும் காணவில்லை. ஆகவே பணம், நகைக்காக மர்ம நபர்கள் மூதாட்டியை கொன்று சாக்கு மூட்டையில் வைத்து சுருட்டி குப்பைத் தொட்டியில் போட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் தான், சூப்பர் பஜார் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, அதில் அப்பகுதியில் உள்ள பிரபலமான ரெடிமேட் ஜவுளி கடை ஒன்றில் பணி புரியும் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த அப்துல் காசன் (வயது 54) என்பவர் மூதாட்டியை கொலை செய்து அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க தோடுகளை திருடிச் சென்றதும், மூதாட்டியை அடித்துக்கொன்று அவரது உடலை அங்கிருந்த வெள்ளை சாக்குப்பையில் போட்டு கட்டி குப்பை கிடங்கில் வீசியதும் சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தெரியவந்தது.
இதை அடுத்து போலீசார் அப்துல் காசனை கைது திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.