பல்லடம் அடுத்த சேமலை கவுண்டம்பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி ( 78 ) அவரது மனைவி அலமேலு ( 75 ) இவர்களது மகன் செந்தில்குமார் ( 42 ) ஆகியோர் கடந்த நவம்பர் 29ஆம் தேதி நள்ளிரவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து அவினாசிபாளையம் போலீசார் 14 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொலை நடந்து 13 நாட்கள் ஆகியும் இதுவரை துப்பு கிடைக்காததால் போலீசார் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. புலம்பெயர் தொழிலாளர்களிடம் கைரேகை மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை சேகரிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த செந்தில்குமார் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு பைனான்ஸ் தொழில் நடத்தி வந்ததாகவும் அதில் கடும் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த தொழிலை கைவிட்டதாகவும் தெரிகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு விவசாயத் தோட்டத்தை குத்தகைக்கு விட்டுள்ளார். இதில் தூத்துக்குடி பகுதியில் சேர்ந்த நபர் ஒருவருடன் பிரச்சனை ஏற்பட்டதாகவும், பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் செந்தில்குமார் அந்த நபரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த அந்த நபரின் பத்திரங்கள் செந்தில்குமாரின் வீட்டில் இருந்ததாகவும், அந்த பத்திரங்களை எடுப்பதற்காக இந்த கொலை சம்பவம் நடந்திருக்குமோ? என்ற கோணத்திலும் தற்போது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த நபர் யார்? அந்த நபருக்கு இந்த கொலையில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.