திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நாளை (டிசம்பர் 8) முதல் 16 ஆம் தேதி வரை திருவண்ணாமலை மாவட்டத்தில் 156 பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத் திருவிழானது வருகிற 13 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த திருக்கார்த்திகை திருநாளில் திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாமலையார் ஆலயத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் நிகழ்வு மிகவும் பிரசித்திபெற்றதாகும். அந்த வகையில், இந்த ஆண்டும், அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சந்நிதியில் பரணி தீபமும், தொடர்ந்து மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயரத்தில் மகா தீபமும் ஏற்றப்பட இருக்கிறது.
இந்த ஆண்டு, மகா தீபத்தை காண சுமார் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் சிறப்பு ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்காக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், சுமார் 16,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள், திருவண்ணாமலை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிகளில் தங்கவைக்கப்பட உள்ளனர்
எனவே, திருவண்ணாமலை மாநகராட்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள 156 பள்ளிகளில் போலீசார் தங்க இருப்பதன் காரணமாக, அந்தப் பள்ளிகளுக்கு நாளை ( டிச.,8 ) முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரை 9 நாட்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுக்கிணங்க, 156 அரசு/ அரசு நிதியுதவி பெறும்/ தனியார் தொடக்க/ நடுநிலை/ உயர்/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு 8.12.2024 முதல் 16.12.2024 வரை 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது என சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. என திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.