மதுரை வழியாக செல்லும் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்களின் பாதுகாப்பான இயக்கத்திற்காக பராமரிப்பு பணிகள் செய்யப்படுவது அவ்வப்போது வழக்கம். இதனால் குறிப்பிட்ட சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படும். பராமரிப்பு பணிகளை பொறுத்து சில ரயில்கள் ரத்தும் செய்யப்படும் நிலை கூட ஏற்படும். மேலும், சில ரயில்கள் பராமரிப்பு பணிகள் நடக்கும் குறிப்பிட்ட வழித்தடத்தை தவிர்த்து மாற்று பாதையிலும் இயக்கப்படும்.
அந்த வகையில் தான், மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் மதுரை வழியாக இயக்கப்படும் தென்மாவட்ட ரயில் சேவைகளில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி இன்று ( டிச.,3 ) முதல் 5ஆம் தேதி, 7, 19, 20, 21, 23, 26, 27, 30, ஜனவரி 3, 6, 8ஆம் தேதிகளில் செங்கோட்டையில் இருந்து மதுரை வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் - 16848 ) விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. மானாமதுரை, காரைக்குடியில் இந்த ரயில்கள் நின்று செல்லும்.
அதே போல, வரும் 19, 26ஆம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மதுரை வழியாக மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் - 16352) விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். இந்த ரயிலானது மானாமதுரையில் நின்று செல்லும்.
21ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக மேற்குவங்க மாநிலம் ஹவுராவுக்கு இயக்கப்படும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் (எண் - 12666) விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும். மானாமதுரையில் மட்டும் இந்த ரயில் நின்று செல்லும்.
அதே போல, வரும் 20, 25, ஜனவரி 2, 5ஆம் தேதிகளில் குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் - 16128) விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும். இந்த ரயில் மானாமதுரையில் மட்டும் நின்று செல்லும். மதுரையில் இருந்து வரும் 26ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் புறப்படும் வாராந்திர அனுராவத் எக்ஸ்பிரஸ் ரயில் (எண் - 22631) 2 மணி நேரம் தாமதமாக மதுரையில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும்.