மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விழுப்புரம் சென்ற தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெஞ்சல் புயலால் வரலாறு காணாத அளவில் பெய்த மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடந்து இரண்டு நாட்களாகியும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளம் இன்னமும் வடியவில்லை.
இதனால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய அடிப்படை தேவைகள் கிடைக்கவில்லை என்று கூறி பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மக்களுக்காக உதவிகளை செய்யவும் மாவட்ட ஆட்சியருடன் தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் சென்ற போது, இருவேல் பத்து பகுதியில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட சென்ற அவருடன், அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.
அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும் வெள்ளம் வந்த பிறகும் போதிய உதவிகள் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டிய நிலையில், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பியுமான கவுதம சிகாமணி ஆகியோர் மீதும் அப்பகுதி மக்கள் மழை சகதியை வாரி எறிந்தனர். சேறானது, அவர்களது வெள்ளை உடையில் பட்டதால், அவசர அவசரமாக அங்கிருந்து அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கிளம்பிச் சென்றனர்.