சமூக வலைதளங்கள் மூலமாக பெண்களை காதலிப்பதுபோல் நாடகமாடி, அவர்களின் தோழிகளுக்கும் காதல் வலைவிரித்து பாலியல் தொல்லை தந்த பொறியியல் பட்டதாரி கைது.
சைதாப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரின் தந்தை தனது மகளின் மொபைல் எண்ணிற்கு ஆபாச குறுஞ் செய்திகள் மற்றும் மகளின் தோழிகளின் மொபைல் நம்பரை கேட்டு தொடர்ச்சியாக மர்ம நபர் ஒருவர் போன் கால் செய்து வருவதாகவும் அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.
மேலும் அந்த நபர் சொல்வதை செய்யாவிட்டல் மார்பிங் செய்யப்பட்ட தனது மகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விடுவதாகவும் மிரட்டல் கால்கள் விடுப்பதாக தெரிவித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவிக்கு மிரட்டல் கால் வந்த நம்பரை டிரேஸ் செய்தனர். அப்போது அந்த நம்பர் தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த அருண் கிறிஸ்டோபர் என்பவரது நம்பர் என்பது தெரியவந்தது.
மேலும், இவர்தான் மிரட்டல் கால் விடுத்ததும் தெரியவந்தது. இவர் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து தற்காலிகமாக மின்வாரிய துறையில் பணிபுரிந்து வருகிறார் என்று விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து அருண் கிறிஸ்டோபர் மற்றும் கல்லூரி மாணவியை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தபோது இருவரும் சமூக வலைதளம் மூலம் நட்பாக பழகி பின்னர் சில மாதங்கள் காதலித்து உள்ளதும் தெரியவந்தது. இவர்கள் காதலிக்கும் போது தனிமையில் ஆபாசமாக பேசிக்கொண்ட சாட், ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்களையும் அருண் கிறிஸ்டோபர் தனது மொபைல் மற்றும் கம்பூட்டரில் பதிவு செய்து வைத்துள்ளார்.
பின்னர் கல்லூரி மாணவியின் தோழிகளை தனக்கு இன்ட்ரோ கொடுக்க வேண்டும் எனக் கூறி அவர்களின் மொபைல் எண்ணை வலுக்கட்டாயமாக கல்லூரி மாணவியின் மொபைலிலிருந்து அருண் கிறிஸ்டோபர் எடுத்துள்ளார்.
மேலும் கல்லூரி மாணவியின் இன்ஸ்டாகிராம் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வாங்கிக்கொண்டு அதிலிருந்து அவரின் தோழிகளுடன் நட்பாக பழகி ஆபாசமாக குறுஞ்செய்திகளையும் ஆபாசமாக புகைப்படங்களையும் அனுப்பி வந்துள்ளார்.
இதனால் சில தோழிகள் அந்த கல்லூரி மாணவியின் தந்தையிடம் முறையிட்டுள்ளனர். அதன் பின்பே கல்லூரி மாணவியின் தந்தைக்கு விஷயம் தெரியவர அவர் தனது மகளிடம் இது பற்றி கேட்டுள்ளார். அதற்கு அவரும் யாரென்று தெரியாத ஒரு நபர் தனது இன்ஸ்டாகிராம் ஐ.டி ஹேக் செய்துவிட்டதாகவும் மேலும் தனது மொபைல் நம்பருக்கு ஆபாச குறுஞ்செய்திகளை அவர் அனுப்பி வைப்பதாகவும் தனது தந்தையிடம் கூறியுள்ளார். இதனையடுத்து அந்த கல்லூரி மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது தெரியவந்தது.
போலீசார் கைதுசெய்த அருண் கிரிஸ்டோபரின் மொபைல் போனை சோதனை செய்து பார்த்தபோது அதில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அருண் கிறிஸ்டோபரின் வீட்டில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் மற்றொரு மொபைலை போலீசார் கைப்பற்றி அதனை சோதனை செய்து பார்த்தபோது கம்ப்யூட்டர் மற்றும் மொபைல்ஃபோனில் ஈஸி வாலட்(easy wallet) என்ற ஆப் இருந்ததும், அதனை திறந்து பார்த்தபோது பல பெண்களின் நூற்றுக்கணக்கான ஆபாச புகைப்படங்களும் ஆபாச வீடியோக்களும் இருந்தது தெரிய வந்தது.
மேலும் பெண்களுடன் உரையாடிய ஆபாச சாட்டுகளின் பேக்-அப்களும் இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். போலீசாரின் விசாரணையில், ’அருண் கிறிஸ்டோபர் சமூக வலைதளங்களின் மூலமாக பெண்களுக்கு காதல் வலையை வீசி, அதன் மூலம் இவர் பேச்சை நம்பி காதல் வலையில் விழும் பெண்களின் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு அவர்களை மிரட்டி வந்துள்ளார்’ எனத் தெரியவந்துள்ளது
மேலும் அதன் மூலமாக அவர்களின் தோழிகளின் மொபைல் நம்பர்களை பெற்று பாலியல் தொந்தரவு கொடுப்பதை வழக்கமாக கொண்டு வந்துள்ளார். பல கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்களின் நூற்றுக்கணக்கான ஆபாச சாட், ஆபாச புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோகளை கைப்பற்றிய போலீசார் இன்னும் இது போல எத்தனை பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
காதல் போர்வையில் இவரால் ஏமாற்றப்பட்டவர்கள் எத்தனை பேர் என்றும், இதனைப் பயன்படுத்தி இவர் பெண்களிடம் பணம் பறித்துள்ளாரா என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.