• vilasalnews@gmail.com

பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தலா ? அமைச்சர் கீதாஜீவன் கொடுத்த அட்வைஸ்!

  • Share on

பணியிடங்களில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெண்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

சமூகநலத் துறை, சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை, தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் சார்பில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை தொடர்பான பயிலரங்கம் சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று நடைபெற்றது.

இதில், சமூகநலத் துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிலரங்கத்தை தொடங்கி வைத்தார். சமூகநலத் துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன், சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை செயலர் தாரேஸ் அகமது, தொழிலாளர் நலத் துறை செயலர் வீரராகவராவ் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர். 

பின்னர் பயிலரங்கத்தில் அமைச்சர் கீதா ஜீவன் பேசியதாவது:-

சமூகநலத் துறை, கல்வித் துறை, மகளிர் மேம்பாட்டுத் துறை, காவல் துறை ஆகிய 4 துறைகளும் அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்புக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. இந்திய அளவில் பணிபுரியும் பெண்கள் 42 % பேர் இருப்பது தமிழகத்தில்தான்.

எனவே, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமையாகும். பணிபுரியும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் சட்டத்தின் மூலம், 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்களில் 24,131 உள்ளக புகார் குழுக்கள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது.

பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்கும் வகையில், 5,498 இடங்களில் "பிங்க் பெட்டிகள்" அமைக்கப்பட்டுள்ளது. இதனை சமூகநலத் துறை அதிகாரிகள் நேரில் சென்று கண்காணிக்கிறார்கள்.

எனவே, பெண்கள் பணியிடங்களில் தங்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் குறித்து தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும். பெண்கள் புகார் அளித்தால் தான் அரசு நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், தமிழகத்தில் பிற மாநில பெண்களும் அதிகளவில் பணிபுரிகிறார்கள்.

எனவே, உள்ளக புகார் குழுக்களில் பிற மாநில பெண்களையும் உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம். சமூகநலத் துறையில் மகளிரின் உதவிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள, "மகளிர் உதவி எண் திட்டம் 181" சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்

  • Share on

மாற்றுத்திறனாளி ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. ரயில்வே கொடுத்த சூப்பர் அப்டேட்!

பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா குற்றவாளி - 6 மாத காலம் சிறைதண்டனை!

  • Share on