• vilasalnews@gmail.com

மாற்றுத்திறனாளி ரயில் பயணிகளுக்கு புதிய வசதி.. ரயில்வே கொடுத்த சூப்பர் அப்டேட்!

  • Share on

மாற்றுத்திறனாளிகளுக்கான இரயில் சலுகைகளை ஆன்லைன் மூலமாக, இருந்த இடத்திலிருந்தே பெறும் வகையில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


மாற்றுத்திறனாளி ரயில் பயணிகள் சலுகை முறையில் பயணம் செய்வதற்கான அடையாள அட்டையானது இனி ஆன்லைன் மூலமாக இருந்த இடத்திலிருந்தே பெறும் வகையில் இணையதள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், பயண சலுகைக்கான அடையாள அட்டை பெறுவதற்கு அவர்கள் தங்கள் நேரத்தை செலவழித்து இனி நேரில் வரத் தேவையில்லை என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


மாற்று திறனாளிகள் ரயிலில் பயணம் செய்ய 75 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த கட்டண சலுகையை பெற கடந்த காலத்தில் அரசு மருத்துவரிடம் மருத்துவ சான்றிதழ் பெற்று அதனை பயணத்தின் போது காண்பித்து சலுகை பெற வேண்டிய நிலை இருந்தது வந்தது. பின் அடையாள அட்டையை பயன்படுத்தி பயண சலுகை பெறும் நடைமுறை தற்போது அமலில் உள்ளது. அதாவது, அடையாள அட்டையைப் பெற கோட்ட ரயில்வே அலுவலகங்களுக்குச் சென்று உரிய சான்றிதழ்களை சமர்ப்பித்து, தேவையான பரிசீலனைக்கு பிறகு அடையாள அட்டை பெற வேண்டியது உள்ளது.


ஆனால், அதனையும் இப்பொழுது எளிமைப்படுத்தும் வகையில் ஆன்லைனிலேயே மாற்றுத் திறனாளிகள் பயண அட்டையைப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலிருந்தே தங்களது அடையாள அட்டையை பெற புதிய இணையதள வசதியை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.


அதன்படி, புதிய முறையில் அடையாள அட்டை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தேவையான சான்றிதழ்களோடு https://divyangjanid.indianrail.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள வசதி மூலம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். உரிய பரிசீலனைக்கு பிறகு அடையாள அட்டையும் இணையதளம் மூலமாக வழங்கப்படும். ஆன்லைன் ஒப்புதல் அளித்த பின்னர் இணையதளத்தில் இருந்தே அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆன்லைனில் பெறும் அடையாள அட்டையை பயன்படுத்தி வழக்கம் போல ரயில்வே பயண சீட்டு பதிவு அலுவலகங்கள் அல்லது இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழக இணையதளம் வாயிலாக பயணச்சீட்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.


அதேபோல், அடையாள அட்டையை பயன்படுத்தி பயணச்சீட்டு பதிவு அலுவலகங்கள் அல்லது யூடிஎஸ் செயலி வாயிலாக முன்பதிவில்லாத பயண சீட்டுகளையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த புதிய முறையின் மூலம் மாற்றுத்திறனாளி பயணிகள் தங்கள் உடலை வருத்திக் கொண்டு அலையத் தேவையில்லை. இணையதளத்திலேயே எளிதாக அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம் எனத் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  • Share on

ஃபெங்கல் புயலாக மாறினால்.. தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்கள் பாதிக்கக்கூடும்?

பணிபுரியும் இடத்தில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தலா ? அமைச்சர் கீதாஜீவன் கொடுத்த அட்வைஸ்!

  • Share on