தென் மேற்கு வங்ககடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெற்று தமிழ்நாடு கடற்கரை பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த புயல் உருவாகும் பட்சத்தில் அதற்கு 'ஃபெங்கல்' என பெயரிடப்படும். இப்பெயரை சவுதி அரேபியா பரிந்துரைத்துள்ளது. இந்த புயலானது புதுச்சேரி - சென்னை இடையே கரையை கடக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று(நவ.,26), நாளை (நவ., 27), நாளை மறுதினம்(நவ., 28) ஆகிய 3 நாள்கள் பரவலாக மிதமான மழையும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று மாலைக்குப் பின் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று சூறைக் காற்றுடன் பெய்த பலத்த மழையால் விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்தது.
கொல்கத்தா, திருவனந்தபுரம், திருச்சி, மதுரை, புவனேஸ்வர், மும்பை, கோவை உள்பட 10 விமானங்கள் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்த நிலையில், காற்றின் வேகம் குறைந்த பின் விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறக்கப்பட்டது.