• vilasalnews@gmail.com

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு செம குட் நியூஸ்!

  • Share on

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு உதவுவதற்காக கேரள அரசு உருவாக்கியுள்ள "சுவாமி சாட்போட் - Swami Chatbot" என்ற செயலியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பக்தர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சபரிமலை ஐயப்பன் திருக்கோவில் கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டிலிருந்து சபரிமலைக்கு ஏராளமான பக்தர்கள் ஆண்டுதோறும் சென்று வருகின்றனர். கடந்த ஆண்டில், சபரிமலைக்குச் சென்ற தமிழ்நாட்டை சேர்ந்த பக்தர்கள் அடிப்படை வசதியும், பாதுகாப்பும் இன்றி சிரமப்பட்டதாக தகவல்கள் வந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அதன்படி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் கேரள அரசின் தலைமைச் செயலாளருடன் தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், பக்தர்களுக்கு கேரளாவில் தக்க அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும் என்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் கேரள மாநில தலைமைச் செயலாளர் உறுதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டில், ஐயப்ப பக்தர்கள் தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்வதில் இடர்பாடுகள் ஏதேனும் ஏற்பட்டால், தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் "சுவாமி சாட்போட் - Swami Chatbot" எனும் வாட்ஸ் அப் செயலி உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதன் மூலம் 24 மணி நேரமும் உதவிகள்  பெற முடியும் என்றும் தமிழ்நாடு அரசுக்கு தெரிவித்து கேரள மாநில பத்தனம் திட்டா மாவட்ட கலெக்டர் கடிதம் எழுதியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கூடுவதால், எதிர்பாராத வகையில் விபத்துகள் ஏதேனும் ஏற்பட்டால் அல்லது அவசர உதவிகள் எதுவும் தேவைப்பட்டால் அத்தகைய தருணங்களில் "சுவாமி சாட்போட்" (Swami Chatbot) என்னும் பயண வழிகாட்டி செயலியில், கைப்பேசி எண் 6238008000 மூலம் Hi என குறுஞ்செய்தி அனுப்பினால், உதவிகள் உடனே கிடைக்கும். அதாவது, காவல்துறை, தீயணைப்பு சேவைகள், மருத்துவ உதவிகள், வன அதிகாரிகள் மற்றும் உணவுப் பாதுகாப்புக்கான அவசர தொலைபேசி எண்களையும் பெற்று கொள்ள முடியும். இது அவசர நேரங்களின் போது உடனடி சேவைகளை பக்தர்களுக்கு அளிக்கிறது.

மேலும், இந்த சுவாமி சாட்போட் - Swami Chatbot ) வாயிலாக சபரிமலைக்குச் செல்லும் தமிழ்நாட்டு பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவில் திறக்கும் நேரங்கள், பூஜை நேரங்கள், அருகிலுள்ள கோவில்கள், தங்குமிடங்கள், உணவகங்கள், விமான நிலையம், ரயில்வே நிலையம், பேருந்து நிலையங்கள் ஆகிய தகவல்களையும் கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் வந்து செல்லும் நேரங்களையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும்.

சபரிமலைக்கு மண்டல, மகரவிளக்கு பூஜைக் காலங்களில் வருகை தரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள், குறித்த காலத்தில் வந்து செல்வதற்கு ஏற்ற வசதிகளையும் பாதுகாப்பு மற்றும் கோவில் தொடர்பான சேவைகளையும் இந்த "சுவாமி சாட்போட்" (Swami Chatbot ) எளிதில் வழங்குகிறது. தமிழ்நாட்டில் இருந்து சபரிமலைக்குச் செல்பவர்கள் இந்த விவரங்களை அறிந்துகொண்டு சிரமம் இல்லாமலும், பாதுகாப்பாகவும் சென்று வரலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Share on

ஏம்மா ஏம்மா தாலியா அங்க கொடுங்க...மணமகளின் கழுத்தில் தாலி கட்ட முயன்ற தனது தாயால் பதறிப்போன மணமகன் - உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைத்த திருமணத்தில் சிரிப்பலை!

தமிழக மீனவர்களின் நெஞ்சில் இடியை இறக்கிய இலங்கை அரசு.. அதிர வைக்கும் உத்தரவு!

  • Share on