தெலுங்கு மக்களை இழிவாக பேசியது தொடர்பான வழக்கில் நடிகை கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீசார் கைது செய்துள்ளனர். ஐதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருந்த கஸ்தூரியை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.
ஹைதராபாத் அருகே புப்பாலகூடா பகுதியில் சினிமா தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் என்பவரின் வீட்டில் தலைமறைவாக இருந்தபோது அவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வீட்டை பூட்டிக்கொண்டு உள்ளே தலைமறைவாக இருந்த கஸ்தூரியை, கைது செய்ய காவல்துறை சென்றபோது கதவை நீண்ட நேரம் திறக்காமல் உள்ளே மறைந்திருந்த கஸ்தூரியை, ஹைதராபாத் போலீஸ் உதவியுடன் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து விடுவோம் என காவல்துறை கூறிய பின் கஸ்தூரி கதவை திறந்து வெளியே வந்ததுள்ளார். அதன் பின்னர் காவல்துறை கைது செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு செய்தவுடன் செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரி, தயாரிப்பாளர் ஹரி கிருஷ்ணன் என்பவரது செல்போன் எண்ணை பயன்படுத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.
ஹைதராபாத்தில் வெளியே செல்லாமல் வீட்டுக்குள்ளேயே கஸ்தூரி பதுங்கி இருந்து தயாரிப்பாளரின் செல்போன் எண்ணை பயன்படுத்தி மற்ற நபர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார் என்பதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
தெலுங்கு மக்களை இழிவாக பேசிய விவகாரத்தில் தலைமறைவான கஸ்தூரி தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் வீட்டிலேயே தஞ்சம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.