மதுரை திருமங்கலத்தில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ஸ்வீட் கடையை திமுக கவுன்சிலர் சூறையாடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. தற்போது, இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் நகராட்சி வணிக வளாக கட்டிடத்தில் கடை வைத்திருப்பவர் லோகேஷ்வரி. இவர் செங்குளம் பகுதியை சேர்ந்த பாண்டி என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். ஆனால் வாங்கிய பணத்தை சொன்னபடி அவரால் திருப்பி கொடுக்க முடியவில்லையாம்.
இதனால், திருமங்கலம் பேருந்து நிலையத்தில் உள்ள தனது கடையை ஆறுமுகம் என்பவருக்கு உள் வாடகைக்கு கொடுத்துள்ளார் லோகேஷ்வரி. மேலும் வாடகை பணத்தை பாண்டியிடம் மாதம் மாதம் கொடுத்திடவும் ஆறுமுகத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து, அந்த கடையில் ஆறுமுகம் டீக்கடை மற்றும் ஸ்வீட்கள் விற்று வந்துள்ளார். மாதம் மாதம் வாடகை பணத்தை பாண்டியிடம் ஆறுமுகம் கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், அசல் தொகை முழுவதையும் கட்டுமாறு பாண்டி ஆறுமுகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு ஆறுமுகம், பணத்தை நான் வாங்கவில்லை, உங்களிடம் பணம் வாங்கியது லோகேஷ்வரி தான். ஆகவே, அவரிடம் கேளுங்கள். நான் மாத வாடகை பணத்தை தருவதாக தான் சொல்லியிருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அப்போது, நீங்கள் தான் மாதம் மாதம் வாடகை பணம் தருகிறீர்கள். உங்களிடம் தான் நான் கேட்கமுடியும் என பாண்டி சொல்லியிருக்கிறார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, பாண்டி இந்த பிரச்சினை தொடர்பாக, தனது உறவினரும், திமுக கவுன்சிலருமான காசி பாண்டியனிடம் கூறியிருக்கிறார். அதன்பிறகு கடந்த வெள்ளிக்கிழமை பாண்டிக்கு ஆதரவாக திமுக கவுன்சிலர் காசி பாண்டியன் திருமங்கலத்தில் உள்ள கடைக்கு வந்திருக்கிறார். அப்போது ஆறுமுகத்திடம் பேசிய காசி பாண்டியன் பணத்தை தருமாறு கேட்டிருக்கிறார்.
அப்போது ஆறுமுகம் கடைக்கு சொந்தக்காரர் ஆன லோகேஷ்வரியிடம் கேளுங்கள் என்று கூறியிருக்கிறார். இவ்வாறாக மாறி மாறி பேசியதில் ஆத்திரமடைந்த காசி பாண்டியன், பிறகு நீ எதற்கு இங்கு கடை நடத்துகிறாய்? உடனே காலி செய் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கடையில் இருந்த பலகாரங்களை தூக்கி எறிந்தார். அங்கிருந்த தட்டை தூக்கி எறிந்தார். மேலும் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கடையில் இருந்தவர்கள் காசி பாண்டியனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தான் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், இச்சம்பவம் குறித்து ஆறுமுகம் திருமங்கலம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.