ஆங்கிலேயர்களுக்கு எதிரான முதல் இந்திய விடுதலைப் போராட்டத்தை துவக்கி வைத்த பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் விடுதலைப் போராட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆய்வுப் புத்தகம்.
1792-ம் ஆண்டு முதல் 1801-ம் ஆண்டு வரை பாஞ்சாலங்குறிச்சி பற்றியும் அதன் தலைவர் கட்டபொம்ம நாயக்கர் பற்றியும் கிழக்கிந்தியக் கம்பெனி இராணுவ அதிகாரிகள் எழுதி வைத்த கடிதக் குறிப்புகளின் மூலம் (circumstantial evidence - சூழ்நிலைச் சான்றாதாரங்கள்) சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ச்சி செய்து வெளிவரக் கூடிய புத்தகம்.
654 பக்கங்கள் கொண்ட இப்புத்தகத்தில், 53 இராணுவ அதிகாரிகள், மற்றும் கலெக்டர்களால் எழுதப்பட்ட 190 கடிதங்கள். இதில் இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மார்னிங்டன் எழுதிய கடிதங்கள். பின்னாளில் இங்கிலாந்து பிரதமரான ஆர்த்தர் வெல்லெஸ்லி எழுதிய கடிதங்கள்.
சென்னை மாகாண கவர்னர் எட்வர்ட் கிளைவ் கட்டபொம்மனை தூக்கில் போடுவதற்காக முன்முடிவு எடுத்து எழுதிய கடிதங்கள். மேஜர் பானர்மேனின் கட்டபொம்மன் தூக்குத்தண்டனை விசாரணைக் குறிப்புகள். (17-10-1799) உட்பட 60 ஆய்வுக் கட்டுரைகள், 75 - கள ஆய்வுப் புகைப்படங்கள்.
1792-ம் ஆண்டு ஆற்காடு நவாப்பும் - கிழக்கிந்தியக் கம்பெனியும் செய்து கொண்ட உடன்படிக்கை. பக்கிங்காம் அரண்மனையில் இடம் பெற்றிருக்கிற இராயல் கலெக்சன் டிரஸ்டில் கட்டபொம்மனின் வாள் சம்மந்தமான மின்னஞ்சல் மூலமாக உறுதி படுத்தப்பட்ட தகவல்கள்.
கட்டபொம்மனோடு போரில் நேரடியாக பங்கேற்ற கர்னல் வெல்ஷ் அவர்கள், 1830-ம் ஆண்டு வெளியிட்ட தன்னுடைய இராணுவ நினைவுகள் புத்தகத்தில் பாஞ்சாலங்குறிச்சி போரை பற்றி பதிவு செய்த அவருடைய குறிப்புகள்.
1802-ம் ஆண்டு ஜார்ஜ் ஆன்ஸ்லே என்ற விஸ்கவுண்ட் வாலென்சியா என்கிற பிரிட்டன் உயர்குடிப் பிரபு இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் போது பாஞ்சாலங்குறிச்சி பற்றி தங்கள் கருத்தை பதிவு செய்த பயணக் கட்டுரை.
1876-ல் ஏழாவது எட்வர்டு பிரபுவின் இந்தியப் பயணக் கட்டுரை. திருவாடுதுறை ஆதீனம் செப்பேடு. திருநெல்வேலி காந்திமதி அம்மன் கோவில் செப்பேடு.
1801-ம் ஆண்டு ஊமைத்துரை மறைவிற்கு பிறகு பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் சொத்துக்களை செட்டில்மெண்ட் செய்த விபரங்கள்.
போன்ற எண்ணற்ற சூழ்நிலைச் சான்றுகள் தாங்கிய கட்டபொம்மன் பதிப்பகம் வெளியீட்டில், நூல் ஆசிரியர் பெ.செந்தில்குமார் எழுத்து மற்றும் தொகுப்பில் உருவாகியுள்ள, "பாஞ்சாலங்குறிச்சி போர்கள்" என்னும் நூல் தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில், கவர்னர் மாளிகை (ராஜ் பவன்) கிண்டி, பாரதியார் அரங்கத்தில், 12 - 11- 2024, மாலை 4 மணிக்கு, தமிழ்நாடு மேதகு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிடுகிறார்.