• vilasalnews@gmail.com

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 2024 : ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி?

  • Share on

திருவண்ணாமலை என்றதுமே நினைவிற்கு வருவது கோவிலுக்கு பின்புறம் இருக்கும் 2668 அடி உயர மலையும், அதை சுற்றி 14 கி.மீ., தூரம் இருக்கும் பாதையில் வலம் வந்து செய்யப்படும் கிரிவலம் வழிபாடும் தான். 

தமிழகத்தில் உள்ள முதன்மையான முக்தி தலங்களில் ஒன்றாகவும், ஆன்மிக பூமியாகவும் விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இது சித்தர்கள் பூமி என்றும், சிவனே மலையாக அமர்ந்திருப்பதால் கைலாயத்திற்கு இணையான தலம் என்றும் பக்தர்களால் போற்றப்படுகிறது. திருவண்ணாமலையில் வருடத்தின் 365 நாட்களும் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம் என்றாலும், பெளர்ணமி நாட்களில் கிரிவலம் செல்ல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை கார்த்திகை மகாதீபத்தன்று நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் விசேஷமானதாகும்.

திருவண்ணாமலை மலை மீது தீபம் ஏற்றிய பிறகு தான் வீடுகளில் தீபம் ஏற்றும் வழக்கமும் உள்ளது. இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா எப்போது நடக்கிறது, செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் என்ன, திருவிழாவில் கலந்து கொள்ள ஆன்லைனில் டிக்கெட் எப்படி புக் செய்வது என்ற விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மற்ற மாதங்களில் வரும் பெளர்ணமியை விட கார்த்திகை மாதத்தில் வரும் பெளர்ணமி மிக விசேஷமானதாகும். இந்த நாளில் தான் ஜோதி வடிவமாக பிரம்மாவிற்கும், விஷ்ணுவிற்கும் ஈசன் காட்சி கொடுத்ததாகவும், இதனை கொண்டாடும் விதமாகவே ஆண்டுதோறும் திருவண்ணாமலை மலை மீது மகாதீபம் ஏற்றப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இறைவனை ஜோதி வடிவமாக வழிபடும் நாள் என்பதால் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீப திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 1ஆம் தேதி துவங்கி, 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. விழாவின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான மகாதேரோட்டம் டிசம்பர் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்த ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கார்த்திகை தீப திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதி அனைத்தும் செய்து தரப்படும். இந்த ஆண்டு திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை காண 35 லட்சம் பக்தர்கள் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும். மருத்துவ வசதிகளும் செய்து தரப்படும். கோவிலுக்குள் 3 மருத்துவ குழுக்கள் இருப்பார்கள். தேர் வெள்ளோட்டம் மற்றும் தேரோட்டத்தின் போது முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்படும்" என்றார்.

மேலும், கார்த்திகை தீபத் திருநாளான டிசம்பர் 13ஆம் தேதி ஏற்றப்படும் பரணி தீபத்தை காண கோவில் உள்ளே 7500 பேருக்கும், மாலையில் மகாதீபத்தை காண 11,500 பேருக்கும் அனுமதி வழங்கப்பட உள்ளது. மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்தை தரிசிக்க 2000 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி வழங்கப்படும். உடல் பரிசோதனை அடிப்படையில் அனுமதி சீட்டுக்கள் வழங்கப்படும். இது தவிர கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்கள் 5200 பேருக்கு பரணி தீபத்தை காணவும், 8000 பேர் மகாதீபத்தை காணவும் அனுமதி வழங்கப்படும்.

பரணி தீபத்தை காண 500 பேருக்கும், மகா தீபத்தை காண 1100 பேருக்கும் ஆன்லைனில் அனுமதி வழங்கப்படும். திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் கலந்து கொள்ள ஆன்லைன் மூலமாக டிக்கெட் முன்பதிவு செய்ய விரும்புபவர்கள் https://hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=20343 என்ற கோவிலின் இணையதளத்திற்கு சென்று, கார்த்திகை தீபத் திருவிழா என்ற பகுதியை கிளிக் செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள உங்களை பற்றிய முழு விபரங்களையும் அளிக்க வேண்டும். பிறகு பரணி தீபம், கார்த்திகை தீபம் ஆகியவற்றை நீங்கள் காண விரும்பும் தரிசனத்தை குறிப்பிட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தி, அனுமதி டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். பரணி தீபத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அதிகாலை 2.30 மணிக்கும், மகா தீபத்தில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் பகல் 3.30 மணிக்கு டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு நெய் காணிக்கை செலுத்த விரும்புபவர்கள் கோவிலில் அதற்காக திறக்கப்பட்டுள்ள கவுண்டர்களில் நெய் வாங்கிக் கொடுக்கலாம். அல்லது நெய்க்கான கட்டணத்தை செலுத்தலாம். ஆன்லைனிலும் நெய் காணிக்கை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. 1 கிலோ நெய் காணிக்கைக்கு ரூ.250 ம், 1/2 கிலோ நெய் காணிக்கை செலுத்த ரூ.150ம், 1/4 கிலோ நெய் காணிக்கை செலுத்த ரூ.80ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.

  • Share on

தென் மாவட்ட ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்!

முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் காலமானார்!!

  • Share on