கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு தெற்கு ரயில்வே தென் மாவட்டங்களுக்கு இரு சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
கந்த சஷ்டி விழா திருச்செந்தூரில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். இங்கு சூரசம்ஹார நிகழ்வைக் காண பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூரை நோக்கி படையெடுப்பார்கள்.
பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே தாம்பரம் முதல் திருநெல்வேலி, திருச்செந்தூர் முதல் சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.
நவம்பர் 6ஆம் தேதி புதன் கிழமை இரவு 10.30 மணிக்கு தாம்பரத்திலிருந்து கிளம்பும் (ரயில் எண் 06099) தாம்பரம் - திருநெல்வேலி சூப்பர் ஃபாஸ்ட் ஸ்பெஷல் மறுநாள் காலை 8.30 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் (ஒரு சேவை). செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில் பட்டி வழியாக நெல்லை சென்றடையும்.
அதே போல, திருச்செந்தூரிலிருந்து நவம்பர் 7ஆம் தேதி வியாழன் இரவு 10.15 மணிக்கு கிளம்பும் (ரயில் எண் - 06100) திருச்செந்தூர் - டாக்டர் எம்ஜிஆர் சென்னை செண்ட்ரல் சூப்பர் ஃபாஸ்ட் ஸ்பெஷல் மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை சென்றடையும் (ஒரு சேவை).
இந்த ரயில் திருச்செந்தூரிலிருந்து ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் வழியாக சென்ட்ரல் சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.