கடந்த ஆண்டைக் காட்டிலும் தீபாவளி பண்டிகைக் காலத்தில் இந்த ஆண்டு சிவகாசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ரூ 6000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையானதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
தீபாவளி குறிப்பிட்ட நேரத்தில் தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற அறிவிப்பால் காலை மற்றும் மாலையில் அதிகம் பேர் பட்டாசுகளை வெடித்தனர்.
கடந்த ஆண்டு தீபாவளியின் போது பட்டாசு விற்பனை நடந்ததைக் காட்டிலும் இந்த ஆண்டு 5 முதல் 7 சதவிதம் அதிகம் விற்பனையாகியிருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகரம் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு தலைவர் பரமேஸ்வரன் மற்றும் செயலாளர் ஜெபசிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
ஆண்டுதோறும் பண்டிகைக் காலங்களில் பட்டாசு விற்பனை சராசரியாக உயர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரையில் 150 க்கும் மேற்ப்பட்ட பட்டாசு கடைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து இருந்தனர்.
தற்காலிக உரிமம் வழங்கும் நடைமுறைகளில் சில வணிகர்களுக்கு கால தாமதம் ஏற்பட்டது. 3 நாட்களுக்கு மட்டும் சில பட்டாசு வணிகர்களுக்கு அனுமதி கிடைக்க பெற்றது. குறைந்தது தற்காலிக உரிமம் 20 நாட்களுக்கு முன்பே கிடைத்து இருந்தால் விற்பனையில் சாதனை படைக்கலாம்.
கடைகளுக்கு வந்து பட்டாசுகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகமாகவே இருந்தது.
நெல்லை மாநகர் பகுதியில் பட்டாசு சில்லறை விற்பனை ஒரு சில சதவிதம் சரிவை கண்டிருப்பது உண்மைதான்.
இந்த ஆண்டு மாவட்டத்தில் 50 கோடி வரை விற்பனையாகும் என கணக்கிட்டிருந்தால் 30 கோடி வரை தான் விற்பனையானது. இதற்கு காரணம் மாதக் கடைசியில் தீபாவளி வந்ததும் இதற்கு காரணம். கடந்த ஆண்டு ஆயிரம் ரூபாய்க்கு பட்டாசு வாங்கியவர்களுக்கு கிடைத்த பட்டாசுகளை விட விலை ஏற்றத்தால் இந்த ஆண்டு குறைவான பட்டாசுகளே கிடைத்திருக்கும். அதே போல் கடந்த ஆண்டு ரூ 1000 க்கு பட்டாசு வாங்கியவர்கள் இந்த ஆண்டு ரூ 500 முதல் ரூ 800 க்குத் தான் வாங்கியிருக்கிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஒரு சில சதவிதம் ஏற்ற இறக்கங்களுடன் பட்டாசு விற்பனை இருந்தாகத் திருநெல்வேலி மாவட்டம் மற்றும் மாநகரம் பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்தனர்.