நெல்லையில் மூட்டை முடிச்சுகளுடன் அரசு பேருந்தில் ஏற முயன்ற ஒருவரை நடத்துனர் தகாத வார்த்தைகளால் பேசியதோடு அவரை கன்னத்தில் ஓங்கி ஓங்கி அறைந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்திய போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்த நடத்துனரை பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.
அரசு பேருந்துகளில் இலவசமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களை நடத்துனர்கள் மரியாதை குறைவாக பேசுவது, பேருந்தில் ஏறியவர்களை இறக்கி விடுவது, இலவச பேருந்து பயணம் செய்யும் மாணவ மாணவிகளை தரக்குறைவாக பேசுவது, பேருந்தை நிறுத்தாமல் செல்வது என பல பிரச்சினைகள் தமிழகத்தில் இருந்து வருகிறது. கடந்த நாட்களுக்கு முன்பு கூட வாரண்ட் இல்லாமல் பயணிக்க முடியாது என காவலரை பேருந்து நடந்துனர் தரக்குறைவாக பேச பதிலடியாக தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் மீது போலீஸ் தரப்பில் அபராதம் விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் சமாதானம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் ஒரு நடத்துனரின் அராஜக செயல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லையில் தனது உடமைகளுடன் ஒருவர் அரசு பேருந்தில் ஏறுவதற்காக முயன்றுள்ளார். அப்போது பேருந்தில் இருந்து இறங்கிய நடத்துனர் இவ்வளவு சாமான்களை பேருந்தில் ஏற்றக்கூடாது எனக் கூறியிருக்கிறார். அதற்கு பயணியோ , வேண்டுமானால் லக்கேஜ் சார்ஜ் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நடத்துனர் அந்த நபரை தொடர்ந்து இரண்டு மூன்று முறை கன்னத்தில் ஓங்கி ஓங்கி அறைந்தார்.
இதற்கிடையே பயணியின் கன்னத்தில் ஓங்கி அடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்திய நெல்லை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் மூலக்கரைப்பட்டியில் மூட்டைகளுடன் பேருந்தில் ஏற முயன்ற பயணியை தாக்கியதாக 52 வயதான நடத்துனர் சேதுராமாலிங்கத்தை பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இதற்கான உத்தரவை அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.