மதுரை சேர்ந்தவர் மணிமாறன் (70). இவர் தினபூமி தினசரி தமிழ் நாளிதழின் உரிமையாளர் ஆவார்.
இவர் நாகர்கோவில் தோவாளையில் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தனது காரில் இன்று மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார். காரை அவரது மகன் சதீஷ் ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் சாலையின் நடுவே உள்ள தடுப்பில் மோதி எதிரே வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே மணிமாறன் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த அவரது மகன் சதீஷ் 108 வாகனம் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாலாட்டின் புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துணிச்சலுக்கு சொந்தகாரர் மணிமாறன்
பிஆர்பி குவாரிகளில் நடக்கும் அத்துமீறல்கள், அராஜகங்கள் பற்றி பத்திரிகைகள் எழுதவே பயந்த காலம் ஒன்று இருந்தது. வாரப்பத்திரிகைகளில் மட்டும் கொஞ்சூண்டு துணிச்சலான கட்டுரைகள் வெளிவந்தது. 2010 -ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தொடர்ந்து 3 மாதமாக பிஆர்பி யின் அத்துமீறல்களைப் பற்றி தினபூமி நாளிதழ் எட்டுக்காலம் செய்தி வெளியிட்டது. சொல்லப்படுகிற விஷயங்களைக் கூட துணிந்து செய்தியாகப் போட்டு, ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டியது தினபூமி.
20.7.10 அன்று அந்தப் பத்திரிகை வெளியிட்ட செய்தி ஒன்று தமிழகத்தையே கலக்கியது. ரூ.1500 கோடி கிரானைட் சுரங்க ஊழல் - நடவடிக்கை எடுக்காத மதுரை மாவட்ட கலெக்டர் என்று முதல்பக்கத்தில் செய்தி வெளியிட்டு, அந்த செய்தி அடங்கிய வால் பேப்பரை யும் ஊரெங்கும் ஒட்டியது தினபூமி. அதிர்ச்சியடைந்த கிரானைட் குவாரி அதிபர்கள், அன்று மாலையிலேயே மதுரை தமிழ்நாடு ஹோட்டலில் அவசர கூட்டம் நடத்தி, இவை எல்லாம் பொய்யான குற்றச்சாட்டுக்கள், பணம் பறிக்கும் முயற்சி என்று கண்டனம் தெரிவித்தார்கள்.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் தினபூமி ஆசிரியர் மணிமாறன், அவரது மகனும் அந்தச் செய்தியை எழுதிய சிறப்பு நிருபருமான ரமேஷ்குமார், அவர்களுக்கு தகவல் கொடுத்து உதவிய மேலூர் வட்டாரத்தை சேர்ந்த முத்தையா ஆகியோரை கைது செய்தார்கள் போலீஸார் என்பது குறிப்பிடதக்கது.