சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்த ஒப்பந்த சுகாதார பணியாளர்களை 12 வாரங்களில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு மேல் தற்காலிக பணியாளர்களாக வேலை செய்து வந்த ஒப்பந்த பணியாளர்கள் 81 பேர், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் நீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது.
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாநகராட்சிகளில் ஒப்பந்த அடிப்படையில் சுகாதார பணியாளர்கள் பணி செய்து வருகின்றனர். தூய்மை பணி உள்ளிட்டவற்றில் ஈடுபடும் சுகாதார பணியாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது. குறைந்த அளவிலான ஊதியமே இவர்களுக்கு வழங்கப்படுவதால் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்பது இவர்களின் நீண்ட கோரிக்கையாக இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒப்பந்த பணியாளர்களாக வேலை செய்து வந்த 81 பேர், தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மேலும் அந்த மனுவில் 3 ஆண்டுகள் பணி செய்தால் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட மாநகராட்சிகளில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய ஒப்பந்த சுகாதார பணியாளர்களை 12 வாரங்களில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.