இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. அந்த துறையானது வசூல் ராஜா எம்பிபிஎஸ் பணிகளை மட்டுமே செய்கிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் பொது நல மனு தாக்கல் செய்தார். அதில் "ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில் மிகவும் பழமையானது. பிரசித்தி பெற்றது. விதிப்படி கோவிலில் 12 குருக்களும் 19 உதவி குருக்களும் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 2 குருக்கள் மற்றும் 7 உதவி குருக்கள் மட்டுமே பணியில் இருக்கிறார்கள்.
ரூ. 90 கோடிக்கும் அதிகமான வருமானம் கிடைக்கிறது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கோவில் வருமானத்தில் கவனம் செலுத்தும் அளவுக்கு பராமரிப்பு மற்றும் பணியிடனங்களை நிரப்புதல் போன்றவற்றில் கவனம் செலுத்துவது கிடையாது. குருக்கள் பணியிடம் மட்டும் இன்றி பாகவதர் உள்பட 42 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. பல சன்னதிகளில் குருக்களே இல்லை. எனவே குருக்களை நியமித்து பூஜைகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார்".
இந்த மனுவை விசாரித்த சுப்பிரமனியன், விக்டோரியா ஆகியோர் அடங்கிய அமர்வானது, "இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. அந்த துறை வசூல் ராஜா எம்பிபிஎஸ் பணிகளை மட்டுமே செய்கிறது என்று தெரிவித்தனர்".
தொடர்ந்து, ராமநாதபுரம் கோவிலில் அனுமதிக்கப்பட்ட குருக்கள், பணியாளர்கள் எண்ணிக்கை எவ்வளவு? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதே போன்று எத்தனை பேர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதேபோல கோயிலின் ஆண்டு வருமானம் எவ்வளவு? எவ்வளவு தொகை செலவழிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பான இந்து சமய அறநிலையத்துறை விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமஸ்வரத்தில் ராமநாத ஸ்வாமி கோயில் உள்ளது. இது புண்ணிய தலம் என்பதால் இங்கு நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்வது வழக்கம். முக்கிய நாட்களில் இங்கு பக்தர்கள் கூட்டம் அலையும் மோதும். தமிழகத்தில் உள்ள சில முக்கியமான கோவில்கள் ஒன்றாக இதுவும் உள்ள நிலையில் இங்கு முறையான பராமரிப்பு இல்லை என்று கூறி தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தான் மதுரை உயர்நீதிமன்ற கிளை இவ்வாறு காட்டமாக கேள்வி எழுப்புள்ளது என்பது குறிப்பிடதக்கது.