முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாகக்கூறி பண மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், ஓராண்டாக சிறையில் இருந்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் உயர்நீதி மன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி தரப்பில் உச்சநீதி மன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிபதி அபய் ஓகா மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு இவரது ஜாமீன் மனுவை விசாரித்து வந்தது. இந்த சூழலில் இந்த மனு மீதான விசாரணையை நிறைவு செய்து தீர்ப்பைத் தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்.
இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று காலை 10.30 மணிக்கு வழங்க இருப்பதாக உச்சநீதி மன்றம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, 471 நாட்களாக சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.