உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் இடது கை பயன்படுத்தும் பழக்கம் உடையவர்கள் என ஐ.நா., ஆய்வு தெரிவிக்கிறது. இவர்களது சாதனைகளை பாராட்டுதல், அவர்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற பொருட்களை தயாரிக்க வலியுறுத்தி ஆக., 13ல் உலக இடது கை பழக்கம் உடையோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இடது கை பழக்கம் ஒருவருக்கு இயற்கையிலேயே அமைந்து விடுகிறது. இது மூளை வளர்ச்சியை பொறுத்து அமைகிறது. இவர்கள் வலது பக்க மூளையை அதிகளவில் பயன்படுத்துவர். இவர்களுக்கு ஞாபக திறன் அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன
உண்மையில் இடக்கைப் பழக்கமுடையவர்கள் புத்திசாலிகள். அவர்களை அப்படியே விட்டுவிடுவது தான் நல்லது. இயற்கைக்கு மாறாக அவர்கள் இயங்கவில்லை, அவர்களுடைய இயற்கையே அதுதான் என்பதை பெற்றோர்களும் சமூகமும் புரிந்து கொள்ள வேண்டும். இடது கை பழக்கம் உள்ளவர்களால் மூளையின் இரண்டு பாகத்துக்கும் தகவல்களை விரைவில் பரிமாறிக் கொள்ள முடியும். விளையாட்டுத் துறை, விஞ்ஞானம், பட்டிமன்றம் என அவர்கள் சில துறைகளில் நுட்பமாக செயல்பட்டு வெற்றி வாகை சூடுவார்கள்.
உலகில் மிகவும் பிரபலமான தொழிலதிபர் பில் கேட்ஸ் இடது கை பழக்கம் உள்ளவர். அதேபோல், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இடது கை பழக்கம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.