திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் மக்களுக்கான கட்டுமான பணி ஆணை மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு தலைமை ஏற்று நடத்தினார். மேலும், சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், " ஊராட்சிகளில் வரும் நவம்பர் 5ஆம் தேதி தலைவர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அதன்பின்னர் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டு, ஆய்வு நடத்தியபின் பெரிய ஊராட்சிகளை பிரிப்பதற்கும், மேலும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அருகே உள்ள ஊராட்சிகளை இணைக்கும் பணிகளுக்கு பின்னர் தான் ஊராட்சி தேர்தல் நடத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.