சமீபகாலமாக திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராகப் பதவி உயர்த்தப்படப் போவதாக பேச்சுகள் தொடர்ந்து அடிபட்டு வருகின்றது. இதுபற்றி உதயநிதி ஸ்டாலின் கூறும் போது, "எதுவாக இருந்தாலும் முதலமைச்சரே முடிவெடுப்பார்" என செய்தியாளர்களிடம் கூறி வருகிறார். இந்த நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் தற்போது இந்த விவகாரத்தில் இன்று வாய்திறந்திருக்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் தனது சட்டமன்றத் தொகுதியான கொளத்தூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார்.
அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலினிடம், "உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆகவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகள் வலுத்திருக்கிறது, முதலமைச்சர் அதை பரிசீலிப்பாரா"? என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "வலுத்திருக்கிறதே தவிர, பழுக்கவில்லை" என்று பதிலளித்தார். மேலும், தென்மேற்கு பருவமழை குறித்த கேள்விக்கு, எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திப்பதற்கு இந்த அரசு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.
உதயநிதியின் துணை முதல்வர் குறித்த கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலினின் பதிலைக் கேட்டு அருகில் இருந்த அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வெடித்துச் சிரித்தனர். தொடர்ந்து, அமைச்சரவை மாற்றத்திற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.