• vilasalnews@gmail.com

திமுக தலைமைக்கு தொல்லையாகும் நெல்லை... ஸ்டாலின் உத்தரவையே மீறிய திமுக கவுன்சிலர்கள்... நெல்லையில் மீண்டும் தலைவலி!

  • Share on

நெல்லையில் இன்று நடைபெற்ற மேயர் தேர்தலில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அதிக வாக்குகள் பெற்று மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றாலும் போட்டி வேட்பாளர் பவுல் ராஜ் 23 வாக்குகளைப் பெற்றது திமுக தலைமையை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினும் டென்ஷனாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.


திருநெல்வேலி மாநகராட்சியில் மேயராக இருந்த சரவணனுக்கு எதிராக உட்கட்சி கவுன்சிலர்களே போர்க்கொடி தூக்கிய நிலையில், திமுக தலைமை அறிவுறுத்தலின்படி, கடந்த மாதம் மேயர் பதவியை ராஜினாமா செய்தார் சரவணன். இதனையடுத்து, அடுத்த நெல்லை மேயர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.


அதனைத்தொடர்ந்து, திருநெல்வேலி மாநகராட்சி மேயர் வேட்பாளர் தேர்வு தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் திமுக கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. திமுகவை சேர்ந்த 6வது வார்டு கவுன்சிலர் பவுல்ராஜ் மற்றும் சில கவுன்சிலர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இருப்பினும், திமுக தலைவர் ஸ்டாலினின் ஒப்புதலோடு, மேயர் வேட்பாளராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார்.


இதனையடுத்து, திமுக தலைமை மேயர் வேட்பாளராக அறிவித்த 25-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவர் வருவதற்கு முன்பாகவே மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த 6 வது வார்டு திமுக கவுன்சிலர் பவுல்ராஜ் மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை வாங்கிகொண்டார்.


இதைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியது. அப்போது திமுக தலைமை அறிவித்த வேட்பாளரான கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருக்கு போட்டியாக பவுல்ராஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். பவுல் ராஜ் வேட்பு மனுவை 4வது வார்டு திமுக கவுன்சிலர் வசந்தா, 41 வது வார்டு மதிமுக கவுன்சிலர் சங்கீதா ஆகியோர் முன்மொழிந்தனர்.


இதைத் தொடர்ந்து, வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. 11.30 மணி முதல் 12 மணி வரை வேட்பு மனு வாபஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் வேட்பாளர்கள் இருவருமே வாபஸ் பெறவில்லை என்பதால், பிற்பகல் 12.30 மணிக்கு தேர்தல் நடைபெற்றது. மறைமுக தேர்தலில் முதலில் 53 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.


பின், முன்னாள் மேயர் சரவணன் பிற்பகல் 12.10 மணிக்கு வாக்களிப்பதற்காக வந்தார். அப்போது அவரை அதிகாரிகள் உள்ளே அனுமதிக்கவில்லை. தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடமே இருந்த நிலையில் காலதாமதமாக வந்ததால் அனுமதிக்க முடியாது என கூறினர். இதைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரும் மாநகராட்சி ஆணையாளருமான சுகபுத்ரா உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு முன்னாள் மேயர் சரவணனை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.


திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் உள்ள 55 மாமன்ற உறுப்பினர்களில் 54 பேர் மறைமுக தேர்தலில் பங்கேற்றனர். அதிமுக மாமன்ற உறுப்பினர் ஜெகநாதன் மட்டும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. தேர்தலில் அதிக வாக்கு பெற்று கிட்டு என்ற ராமகிருஷ்ணன் மேயராக தேர்வானார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பவுல்ராஜ் தோல்வியுற்றார்.


மொத்தம் பதிவான வாக்குகளில், கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் 30 வாக்குகளும், பவுல்ராஜ் 23 வாக்குகளும் பெற்றனர். ஒரு செல்லாத வாக்கு பதிவானது. வெற்றியை அடுத்து ராமகிருஷ்ணனுக்கு வெற்றிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.  3 முறை கவுன்சிலராக இருந்துள்ள கிட்டு என்ற ராமகிருஷ்ணன் தற்போது நெல்லை மாநகராட்சியின் மேயர் ஆகியுள்ளார்.


இது ஒருபுறம் இருக்க, இந்த மறைமுக தேர்தலில் போட்டி வேட்பாளர் பவுல் ராஜுக்கு 23 வாக்குகள் கிடைத்தது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.


திமுக தலைவர் ஸ்டாலினே, நெல்லை மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்பதை முடிவு செய்து இந்த கவரில் கொடுத்து அனுப்பியுள்ளார் எனக் கூறித்தான் நேற்று நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்தில் அமைச்சர்கள், கிட்டு என்ற ராமகிருஷ்ணனை மேயர் வேட்பாளராக அறிவித்தனர்.


இவ்வாறு இருக்க, முதல்வர் ஸ்டாலின் உத்தரவை மீறி இன்று திமுக கவுன்சிலர்களே வாக்களித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக கூட்டணிக்கு 51 கவுன்சிலர்கள் இருக்கும் நிலையில் 30 வாக்குகள் மட்டுமே கிட்டு என்ற ராமகிருஷ்ணன்னுக்கு விழுந்துள்ளது.


திமுகவுக்கு தனியாகவே நெல்லை மாநகராட்சியில் 44 கவுன்சிலர்கள் உள்ளனர். தற்போது கிட்டுவுக்கு 30 ஓட்டுகள் மட்டுமே மறைமுக தேர்தலில் கிடைத்துள்ளதால், திமுக கவுன்சிலர்களே 14 பேர் பவுல் ராஜுக்கு வாக்களித்துள்ளது தெரியவந்துள்ளது. இது அமைச்சர்களையும், முதல்வரையும் டென்ஷன் ஆக்கியுள்ளதாக கூறப்படுகிறது.


ஏற்கனவே, மேயராக இருந்த சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் பஞ்சாயத்துக் கூட்டி வந்த நிலையில், தற்போது மேயராகி இருக்கும் ராமகிருஷ்ணனுக்கு எதிராகவும் திமுக கவுன்சிலர்களில் பலர் வாக்களித்துள்ளதால், திமுக தலைமைக்கு தொல்லையாக நெல்லை அமைந்துள்ளது. மேலும், நெல்லை மாநகராட்சியில் சிக்கல் இப்போதைக்கு தீராது எனக் கூறப்படுகிறது. இதனால், மாற்றி ஓட்டுப்போட்ட கவுன்சிலர்களை கண்டறிந்து அதிரடி ஆக்‌ஷன் நடக்கும் என்கிறார்கள் திமுக வட்டாரத்தில்.

  • Share on

மீண்டும் சூடுபிடிக்கும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் : வலுத்திருக்கிறதே கோரிக்கை.. பழுக்கிறதா?முதல்வர் ஸ்டாலின் நறுக் பதில்!

  • Share on