பத்திரிகை ஊடகங்கள், மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் வழங்கப்பட்ட 50 சதவீதம் சலுகை கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அந்த சலுகையை வழங்க மக்களவையில் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்களவையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய துரை வைகோ, 'கோவிட் 19 லாக்டவுன் முன்பு வரை மூத்த குடிமக்கள் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற பத்திரிகை ஊடகங்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப்பட்டது. ஆனால், கோவிட் 19 லாக்டவுன் அறிவித்தபிறகு அந்த கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. தற்போது வரை மூத்த குடிமக்கள் மற்றும் ஊடகத்துறையினர் பலமுறை கோரிக்கை வைத்தும் கட்டன சலுகை திரும்பி வழங்கப்படவில்லை.
எனவே, அரசு அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீதம் பயணச்சீட்டு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். மேலும், 2020 மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மாணவர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட சலுகையுடனான மாதாந்திர சீட்டுகளையும் மீண்டும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு துரை வைகோ பேசினார்.