சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பெண் ஒருவர், தெற்கு மண்டல கணினிசார் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், நான் தினமும் செம்மொழி பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம். இந்த நிலையில், அந்தப் பூங்காவின் நற்பெயரைக் கெடுக்கும் வகையிலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் ஆபாசமான உடல்மொழி சைகைகளோடு வீடியோ பதிவு செய்து, அதை பிரியாணி மேன் என்ற யூடியூப்பில் பதிவு செய்தவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியாணி மேன் யூடியூப் சேனலை நடத்தி வரும் அபிஷேக் ரபி (29) என்பவரை கைது செய்தனர்.
பொதுவாக யூடியூப்களில் எந்தவித விதிமுறைகளும் இல்லாமல் பொழுதுபோக்கை தாண்டி பணம் சம்பாதிக்கும் நோக்கத்தோடு வீடியோக்கள் பதிவு செய்யப்படுகின்றன. அந்த வகையில்தான் சென்னை செம்மொழி பூங்காவைக் குறித்து அவதூறான கருத்துக்களை பிரியாணி மேன் என்ற யூடியூப்பில் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இந்த யூடியூப்பை நடத்தி வருபர் அபிஷேக் ரபி. இவர் செம்மொழி பூங்கா விவகாரம் மட்டுமல்லாமல் பிற யூடியூபர்கள் குறித்தும் அவதூறான கருத்துக்களை வீடியோவாக பதிவு செய்து தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வந்தார். இந்த நிலையில்தான் அபிஷேக் ரபி மீது பெண் ஒருவர் எங்களிடம் புகாரளித்ததும் அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர் என்பது குறிபிடதக்கது.