• vilasalnews@gmail.com

2 நாட்களில் வெளியே வருகிறாரா சவுக்கு சங்கர்? வழக்கறிஞர்கள் பேட்டி!

  • Share on

பெண் காவலர்களை இழிவாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் இன்று உதகை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கரை ஒருநாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சவுக்கு சங்கருக்கு எதிரான 17 வழக்குகளில் 10 வழக்கில் ஜாமின் கிடைத்து விட்டது. விரைவில் ஜாமீனில் விடுதலை ஆக வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் ஒன்றில் பிரபல யூடியூபரும் சவுக்கு மீடியா உரிமையாளருமான சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 14 ஆம் தேதி கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், தேனியில் தங்கியிருந்த அறையில் கஞ்சா வைத்திருந்த வழக்கிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கருக்கு எதிராக பத்திற்க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. இதில் பல வழக்குகளில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த நிலையில், போதைப்பொருள் வழக்கிலும் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே, பெண் காவலர்களை அவதூறாக பேசியதற்காக நீலகிரி மாவட்டம் உதகை புதுமந்து காவல்நிலைய ஆய்வாளர் அல்லிராணி, கடந்த மே மாதம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் நீலகிரி மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக இன்று காலை பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை காவல் துறையினர் கோவையில் இருந்து வாகனம் மூலம் உதகை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். காலை 11.30 மணியளவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு சவுக்கு சங்கர் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:- சவுக்கு சங்கரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதற்கு நாங்கள் எதிர்ப்பை பதிவு செய்து, எங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தோம். ஏனெனில் இந்த குறிப்பிட்ட ஒரே வழக்கிற்காக தமிழகத்தில் 17 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் கிட்டத்தட்ட 10 வழக்குகளில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

5 வழக்குகளில் அவரை கைது செய்ய முடியாது என்று நீதிபதிகள் தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். மேலும், இரண்டு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரித்து விட்டார்கள். இனி அவரை விசாரிக்க வேண்டியது இல்லை என்பதால் காவலில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று நாங்கள் வாதம் வைத்தோம்.

ஆனால், காவல்துறை தரப்பில் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. சவுக்கு சங்கரை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஒருநாள் போலீஸ் காவலில் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சவுக்கு சங்கரை வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட பிறகும் கூட, இந்த காவல்துறை அவரை மீண்டும் மீண்டும் துன்புறுத்த வேண்டும் என்று காவலில் எடுத்து இருக்கிறார்கள். சவுக்கு சங்கரை ஜாமீனில் கொண்டு வரவும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜாமீன் மனுவையும் இன்றே தாக்கல் செய்துள்ளோம். இந்த வழக்கிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் 2 நாட்களில் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது என்றனர்.

  • Share on

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புதுக்கோட்டை பல் மருத்துவர் போக்சோ சட்டத்தில் கைது!

சினிமா தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்க துறை ரெய்டு... காலையிலேயே பரபரக்கும் சென்னை!

  • Share on