புதுக்கோட்டையில் தனது தாய் உடன் பல் வலிக்காக சிகிச்சைக்கு சென்ற 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பல் மருத்துவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவ்விவகாரம் தொடர்பாக சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பாலியல் தொல்லை கொடுத்த பல் மருத்துவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகரப் பகுதிக்கு உட்பட்ட திருக்கோகர்ணம் மேல தெருவை சேர்ந்த பல் மருத்துவர் அப்துல் மஜித்(36). இவர் திருக்கோகர்ணம் பகுதியில் பல் மருத்துவமனை நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது பல் மருத்துவமனைக்கு அதே பகுதியைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் 17 வயதுடைய மாணவி அவரது தாயாருடன் பல் வலிக்காக சிகிச்சைக்கு சென்றுள்ளார். அப்போது மாணவியின் தாயாரை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மருந்தகத்தில் மருந்து வாங்கி வர அனுப்பி விட்டு, அந்த மாணவிக்கு பல் மருத்துவர் அப்துல் மஜித் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாராம்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, உடனடியாக தனது தாயாரை தொடர்பு கொண்டு மருத்துவமனைக்கு உடனே வாருங்கள் என்று கூறி, பின்னர் அங்கு நடந்ததை மாணவி அவரது தாயாரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார். இதனையடுத்து இது குறித்து மருத்துவரிடம் மாணவியின் தாயார் கேட்டபோது தெரியாமல் செய்துவிட்டேன் என்று பல் மருத்துவர் அப்துல் மஜித் தெரிவித்த நிலையில், உடனடியாக இதுகுறித்து மாணவியின் தாயார் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அப்துல் மஜித்தை கைது செய்தனர். சிகிச்சைக்கு சென்ற மாணவியிடம் பல் மருத்துவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு தற்போது போக்சோ சட்டத்தில் கைதாகி உள்ள சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.