கடந்த ஒரு வாரமாக இணையத்தில் பெரிய பிரச்சனையாக மாறி இருப்பது பிரியாணி மேன் | இர்பான் | டெய்லர் அக்கா சண்டைதான். இணையத்தையே இந்த சண்டைதான் உலுக்கி உள்ளது. அதிலும் பிரியாணி மேன் தற்கொலை முயற்சி செய்யும் அளவிற்கு (உண்மையாவா என்பது கேள்வி ( ? ) குறி) நிலைமை மோசமாகி இருப்பது தான் கவனம் ஈர்த்து உள்ளது. சமூக வலைதளத்திலேயே மூழ்கி இருக்கும் மக்களுக்கு, இந்த 2கே உலகில் நடக்கும் இந்த சண்டை பற்றி தெரியாதவர்களுக்கு என்ன நடக்கிறது என்று புரியாதவர்களுக்கு ஒரு எளிமையான விளக்கம் இங்கே பார்ப்போம்.
பிரியாணி மேன் என்பவரின் உண்மையான பெயர் ரபி. இவர் பிரியாணி மேன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். abusive என்ற சொல்லுக்கு அர்த்தம் இருக்கும் என்றால் அது பிரியாணி மேன்தான். வாயை திறந்தாலே வன்மம், கோபம், அசிங்கம்தான் இவரின் ஸ்டைல். இதை சிலர் dank, dark என்றெல்லாம் சொல்வது உண்டு. ஆனால் உண்மையில் dank, dark வீடியோக்களை சர்வதேச அளவில் பார்த்தவர்களுக்கு இவர் பேசுவது dank, dark இல்லை. abusive என்று எளிதாக தெரிந்து இருக்கும்.
பெண்களை விடாமல் திட்டுவது, பெண்கள் வீட்டு வேலை பார்க்க வேண்டும், திருமணம் செய்வதே வேலை பார்க்கத்தான், செம்மொழி பூங்கா என்பது பாலியல் தொழில் செய்யும் இடம் என்று தொடங்கி இவர் பேசுவது எல்லாம் அசிங்கம், வன்மத்தின் உச்சமாகத்தான் இருக்கும். சிலரது பார்வையில் இவர் பெண் சுதந்திற்கு எதிரான மனநிலைகொண்டவராம்.
இப்படிப்பட்ட பிரியாணி மேன் மீது ஏற்கனவே ஒரு டாரஸ் லாரில் அள்ளிபோடும் அளவிற்கு புகார் உள்ளதாம். அதாவது சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்து டெலிகிராம் குழுவின் அட்மின் ஒருவருடன் இவர் நட்பாக இருந்ததும். அதன்பின் விஷயம் பெரிதான போது இதில் இருந்து பிரியாணி மேன் எஸ்கேப் ஆனதாகவும் புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் அதில் நேரடியாக பிரியாணி மேன் மீது புகார் வைக்க பெரிதாக ஆதாரங்கள் கொடுக்கப்படவில்லை.
இப்படிப்பட்ட பிரியாணி மேன்தான் சமீபத்தில் இர்பான் மீதும், டெய்லர் அக்கா மீதும் கடுமையான புகார்களை வைத்திருக்கிறார். இர்பான் என்பவர் உணவு ரிவ்யூ செய்யும் நபர். டெய்லர் அக்கா என்பவர் தயாளு டிசைன்ஸ் என்ற நிறுவனத்தை வைத்துள்ளார். இது டெய்லரிங் நிறுவனம். இன்ஸ்ட்டாகிராமில் இவர் டெய்லரிங் கற்று கொடுக்கிறார். இதற்காக தனி பக்கம் வைத்துள்ளார். சமீபத்தில் டெய்லர் அக்கா என்று இவர் டிரெண்டிங் ஆனார். இதற்கு அவரின் வீடியோக்கள்தான் காரணம்.
இர்பான், டெய்லர் அக்கா அளவிற்கு பிரியாணி மேன் பிரபலம் கிடையாது. இப்படிப்பட்ட நிலையில்தான் பிரியாணி மேன் கடந்த சில நாட்களில் இரண்டு பேரையும் தாக்கி வீடியோ தூக்கி போட்டு இருந்தார்.
இதன் பின் நடந்தது என்னவென்றால்...
பிரியாணி மேன் இர்பானை பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் இர்பான் மச்சான் ஏற்படுத்திய கார் விபத்து பற்றி விமர்சனங்களை வைத்தார். அது இர்பான் செய்தது என்றும், விபத்து ஏற்படுத்திவிட்டு இர்பான் நிற்கவில்லை என்றெல்லாம் கூறினார். அதோடு இர்பான் தனது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரத்தை பற்றியும் விமர்சனங்களை வைத்தார்.
இதற்கெல்லாம் இர்பான் ஆதாரங்களுடன் பதிலும் கொடுத்தார். மச்சான் ஓட்டியதற்கான ஆதாரம், விபத்து ஏற்படுத்திய பின் அங்கேயே நின்றதற்கான ஆதாரம், போலீசிடம் பேசியது உள்ளிட்ட விஷயங்கள் பற்றி எல்லாம் இர்பான் பதிலடியை கொடுத்தார். அதோடு புகார்களுக்கு எல்லாம் ஆதாரங்களுடன் இர்பான் பதிலடி கொடுத்தார்.
பின்னர், டெய்லர் அக்கா ப்ளவுஸ் வீடியோ என்று ஆபாசமாக வீடியோ போடுவதாக புகார் வைத்த பிரியாணி மேன், அதோடு நிற்காமல் டெய்லர் அக்காவை கடுமையாக தாக்கி பேசினார். அவர் பெண் என்பதற்காகவே கடுமையாக பேசினார். அதோடு இல்லாமல் அவர் மோசடி செய்வதாகவும் புகார்களை வைத்தார்.
ஆனால் இதற்கு டெய்லர் அக்கா பதில் தரவில்லை. நீ என்ன வேண்டுமானாலும் பேசிக்கிட்டு போ என்று விட்டுவிட்டார்.
ஆனால் ஏ2டி என்ற சேனல், பிரியாணி மேன் டெய்லர் அக்கா மீது வைத்த புகார்கள் எல்லாம் பொய் என்பதை ஆதாரங்களுடன் நிரூபித்தார்.
இப்படி இருக்க கடுப்பான பிரியாணி மேன் லைவ் வீடியோ போட்டு ஏ2டி சேனலை தாக்கியதோடு, தற்கொலையும் செய்வது போல செய்து காட்டினார். லைவ் வீடியோவில் இதை செய்ய அப்போது பேசி வைத்து போலவோ அல்லது வீடியோ பார்த்தோ அவரின் அம்மா கதவை தட்டி தற்கொலை முயற்சி கைவிடப்பட்டது. இந்த முயற்சியே ஒரு நாடகம் என்று ஒரு பக்கம் புகார்கள் வைக்கப்படுகின்றன.
அரசின் சமூக நீதி திட்டங்களை அசிங்கமாக பேசிய பிரியாணி மேனை கைது செய்ய வேண்டும் என்று திமுகவினர் சிலர் கூற, தற்போது பிரியாணி மேனுக்கு சில அதிமுகவினர் சப்போர்ட் செய்கின்றனர். இர்பான், டெய்லர் அக்கா அதன்பின் இதில் தலையிடாமல் அமைதியாக உள்ளனர்.
சமூக வலைதளங்களில் நித்தமும் மூங்கி நீச்சல் போட்டு கொண்டு இருப்பவர்களுக்கு பிரியாணி மேன் - இர்பான் - டெய்லர் அக்கா சண்டை பொழுதுபோக்கிற்கான முரட்டு தீனியாக உள்ளது. இவர்களது சண்டை என்னவென்று செய்திகள் பக்கமே எடுத்து கூறும் அளவிற்கு இருக்குனா பார்த்துக்கோங்க!