பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதி கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர், மாநில தலைநகரில் துடிக்கத் துடிக்க வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே அதிரச் செய்தது.
இந்த கொலைச்சம்பவம் தொடர்பாக 8 பேர் சரண் அடைந்த நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மூளையாக செயல்பட்ட ரவுடி திருவேங்கடம் கடந்த 14ஆம் தேதி என்கவுண்டர் செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில், சென்னை அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு மத்திய அமைச்சரும், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவருமான ராம்தாஸ் அத்வாலே இன்று வருகை வந்தார். ஆம்ஸ்ட்ராங் உருவப் படத்திற்கு மரியாதை செலுத்திவிட்டு, அவரது மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராம்தாஸ் அத்வாலே:-
பகுஜன் சமாஜ் தலைவர் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என ஆம்ஸ்ட்ராங் கொலையின் மூலம் தெரியவருகிறது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை சிபிஐக்கு பரிந்துரைக்கக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளேன். சிபிஐ விசாரிக்க வேண்டும் என மத்திய உள்துறைக்கும் வலியுறுத்த உள்ளேன். சிபிஐ விசாரணை மூலம் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும்.
மேலும், திருமாவளவன், கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன், ஜெகன் மூர்த்தி உள்ளிட்ட பட்டியலின தலைவர்களுக்கு பாதுகாப்பு தேவை. அவர்களுக்கான பாதுகாப்பை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பலப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இந்திய அளவில் முக்கியமான பட்டியலின தலைவர்களில் ராம்தாஸ் அத்வாலேவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.