• vilasalnews@gmail.com

சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும் - அமைச்சர் கீதா ஜீவன் ஆவேசம்!

  • Share on

ஒரு கட்சி தலைவர் என்பதற்கான பண்பே இல்லாமல் சீமான் பேசுவதாகவும், அவர் தனது நாக்கை அடக்கி பேச வேண்டும் என்றும்அமைச்சர் கீதா ஜீவன்  தெரிவித்துள்ளார். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீது திமுகவின் தொழில்நுட்ப பிரிவு (ஐடி விங்) சார்பில் திருச்சி சைபர் கிரைம் போலீல் புகார் அளிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சாட்டை துரைமுருகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து, நெல்லை வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் நேற்று (11.07.2024) கைது செய்தனர். பின், சாட்டை துரைமுருகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இரு தரப்பு வாதங்களையும் நீதிபதி கேட்டறிந்தார். அதனையடுத்து, சாட்டை துரைமுருகனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அனுப்ப நீதிபதி சுவாமிநாதன் மறுத்து சாட்டை துரை முருகனை விடுவித்து உத்தரவிட்டார்.

முன்னதாக, சாட்டை துரைமுருகன் கைதுக்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “கொலைகாரர்கள், கள்ளச்சாராய ஆலை அதிபர்கள் மீது எல்லாம் பாயாத வழக்கு, சட்டம், கைது பேசியதற்காக துரைமுருகனை கைது செய்வதா? எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்தார்கள்? முன்னாள் முதல்வர் கலைஞரை எங்கே அவர் அவதூறாக பேசினார்? அவர் பாடியது ஏற்கெனவே இருந்த பாட்டுதானே? நானும் அதே பாட்டை பாடுகிறேன். இப்ப நான் பாடிவிட்டேன், என்னை கைது செய்யுங்கள் பார்க்கலாம்” என்று கூறினார்.

இந்த நிலையில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று (12-07-24) தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்:-

குறிப்பிட்ட சாதியைச் சொல்லி பாட்டு பாடி அந்தச் சமூகத்தை மீண்டும் அவமதித்துள்ளார் சீமான். தான் இயக்கிய ‘தம்பி’ படத்தில் அந்தச் சொல்லை பயன்படுத்தியதால் மன்னிப்பு கேட்டிருக்கிறார். சாதி ரீதியான, மத ரீதியான பிரச்சனையை உருவாக்க சீமான் நினைக்கிறார். மாற்றி மாற்றிப் பேசும் சீமான் தனது மனநிலையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது. நாங்கள் ஆளும் கட்சியாக இருப்பதால் பொறுப்புணர்வோடு அமைதி காத்துவருகிறோம். அதே போல் எங்கள் தலைவரின் கண் அசைவிற்காகவும் காத்து வருகிறோம்.

சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் சீமான் பேச்சு உள்ளது. கலைஞர் அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களை தீட்டியவர். மேலும் சாதி, மதத்தின் பெயரால் சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்க சீமான் முயற்சிக்கிறார். மதம், சாதியின் பெயரால் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கில் சீமான் பேசி வருகிறார். 

சீமான் நாக்கை அடக்கி வாசிக்க வேண்டும். அரசியல் அரைவேக்காடு தனமாக பேசக்கூடாது. கலைஞரை பற்றி பேச அருகதையற்றவர் சீமான் என கீதா ஜீவன் தெரிவித்தார்.

  • Share on

அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பாஜக சார்பில் மனு!

என் உயிருக்கு ஆபத்து...என்னை கொல்ல சதி - சாட்டை துரைமுருகன் பகீர்!

  • Share on