பேரறிவாளன் உள்ளிட்ட 6 பேர் கருணை மனுக்களை நிராகரிக்க வேண்டும் என திமுக ஆட்சியில் அமைச்சரவை முடிவெடுத்தது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், மரண தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் நளினிக்கு மட்டுமே ஆயுள் தண்டனையாக குறைக்கலாம் என திமுக ஆட்சியின் போது அமைச்சரவை முடிவு செய்ததாக தெரிவித்தார். பேரறிவாளன் உள்ளிட்ட மற்ற 6 பேரின் கருணை மனுக்களை நிராகரிக்கலாம் என திமுக அமைச்சரவை முடிவு செய்ததாக எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால் 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை, சட்டப்பேரவையிலும், அமைச்சரவையிலும் கொண்டு வந்தது அதிமுக அரசு தான் என்றார் அவர்.
சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுவிக்க அரசு சார்பில் அனைத்து முயற்சிகளும் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருவதாக எடப்பாடி பழனிசாமி கூறினார். இது தொடர்பாக ஆளுநரிடம் இருந்து இது வரை எந்த பதிலும் வரவில்லை என்றும் ஆனால் ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
7 பேர் விடுதலை விவகாரத்தை வைத்து தேர்தலில் மக்களின் அனுதாபத்தை பெற திமுக முயற்சிக்கிறது என்றும் இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.