• vilasalnews@gmail.com

தமிழகத்தின் தலைநகரிலேயே பிரபல அரசியல் கட்சி மாநில தலைவர் கொடூரமாக வெட்டி படுகொலை... யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

  • Share on

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 பைக்குகளில் வந்து வெறிச்செயலில் ஈடுபட்டவர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக கொலையாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் ( வயது 52 ) இவர் சென்னை பெரம்பூர் அருகே செம்பியன் பகுதியில் வசித்து வருகிறார். 5.7.24 அன்று இரவு சுமார் 7 மணியளவில் வீட்டின் முன் நின்று சிலருடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் அவருக்கு பல இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அப்படியே அங்கு சரிந்தார். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த ஆம்ஸ்ட்ராங்கை கிரீம் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், அங்கு சிகிச்சை பலினின்றி ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்தார்.

இதையடுத்து, அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றிய காவல்துறையினர் கொலையாளிகளை வலைவீசித் தேடி வருகின்றனர். ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி சென்ற கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

சென்னையை பூர்வீகமாக கொண்டவர் ஆம்ஸ்ட்ராங். இவரின் தந்தை தீவிர பெரியாரிய மற்றும் திராவிடர் கழக ஆதரவாளர். பள்ளி காலத்தில் இருந்தே அரசியல் ஆர்வத்துடன் இருந்த ஆம்ஸ்ட்ராங், ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்பு நிலை மக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்தார்.

2000-ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அம்பேத்கர் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங்க், 2006-ஆம் ஆண்டு டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன் எனும் அமைப்பை அப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து தொடங்கினார். 2006ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில் 99 வது வார்டில் சுயேட்சையாக களமிறங்கி வென்று சென்னை மாமன்ற உறுப்பினர் ஆனார்.

இவர் சென்னை மாமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு பணிகளைச் செய்தார். குறிப்பாக, அவரது தலைமையில் நடந்த போராட்டத்தின் காரணமாக, போதிய பாதுகாப்பு உபகரணம் இன்றி, சரியான ஊதியம், பணியிட பாதுகாப்பு இல்லாமல் பணியாற்றிய சுமார் 2500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அரசு ஊழியர்களாக அங்கீகரிக்கப்பட்டனர்.

2007ல், உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், 2011 சட்டப்பேரவை தேர்தலில் பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் கொளத்தூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். அனைத்து தலித் அமைப்புகளுடன் இணக்கமாக அரசியல் பணியாற்றி வந்தார். 17 ஆண்டுகளாக தொடர்ந்து, பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு தனது வீட்டின் முன்பாகவே, மர்ம கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் . தலைநகர் சென்னையிலேயே ஒரு கட்சியின் மாநில தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

ஜூலை 10 பொது விடுமுறை : தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை மாநகரின் புதிய போலீஸ் கமிஷனர் அருண் ஐபிஎஸ்.. யார் இவர்?

  • Share on