கைலாசா நாடு இருக்கும் இடத்தை வருகிற 21-ஆம் தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யானந்தா. இவர் கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஆசிரமம் ஒன்றை நடத்தி வந்தார். இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நித்யானந்தாவுக்கு ஏராளமான சீடர்கள் உள்ளனர்.
இதனிடையே, பாலியல் புகார், ஆள் கடத்தல், பண மோசடி என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்யானந்தா, கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இந்தியாவிலிருந்து மாயமானார். இதனையடுத்து இந்துக்களுக்காக கைலாசா என்ற புதிய நாட்டை உருவாக்கி உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
மேலும், அந்நாட்டுக்கென தனி கொடி, பாஸ்போர்ட், கரன்சி ஆகியவற்றை வெளியிட்டதுடன், இந்தியர்கள் கைலாசா குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் சுவாமி நித்யானந்தா அறிவித்திருந்தார்.
ஆனால், கைலாசா என்ற நாடு எங்குள்ளது என்பது இன்று வரை யாருக்கும் புரியாத புதிராகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் கைலாசா இருக்கும் இடத்தை வருகிற 21-ஆம் தேதி அறிவிக்க போவதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவரது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "கைலாசா திறக்கப்பட்டுள்ளது. வருகிற 21-ஆம் தேதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படும். உங்களை அன்போடு வரவேற்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைலாசா வாசியாக இப்பொழுதே பதிவு செய்யுங்கள் என்று ஒரு ஆன்லைன் லிங்கும் குறிப்பிட்டுள்ளனர்.